இடிந்து விழும் நிலையில் பழமை வாய்ந்த நொடி நைனார் கோவில்


இடிந்து விழும் நிலையில் பழமை வாய்ந்த நொடி நைனார் கோவில்
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:46 PM GMT)

திருவாரூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமை வாய்ந்த நொடி நைனார் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

திருவாரூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமை வாய்ந்த நொடி நைனார் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நொடி நைனார் கோவில்

திருவாரூர் சைவ சமயங்களின் தலைமை பீடமாக திகழ்கிறது. பிறக்க முக்கி அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் பழம்பெருமை வாய்ந்த சிவாலயமாகும். இந்த சிறப்புமிக்க கோவிலை சுற்றி 4 எல்லைகளில் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றாக கீழவீதி, தெற்குவீதி சந்திப்பு பகுதியில் நொடி நைனார் கோவில் அமைந்துள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் தியாகராஜர் கோவில் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.

இந்த கோவில் சரிவர நிர்வகிக்கப்படாத நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து பலர் மேற்கொண்ட முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவிலில் வழிபட பாதை ஏற்படுத்தப்பட்டது.

பாலாலயம்

இருந்தபோதிலும் இந்த கோவிலின் மேற்கூரைகள் இடிந்தும், கோபுரம் கலசங்கள் சிதைந்தும், எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடும் அபாய நிலையில் கோவில் உள்ளது. சிதிலம் அடைந்த இக்கோவிலை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த கோவிலுக்கு என்று தனியாக அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கீழவீதி துர்வாசகர் கோவில் மற்றும் நொடி நைனார் ஆகிய கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது.

பக்தர்கள் உதவியுடன் பூஜை

இதில் துர்வாசகர் கோவிலில் பணிகள் காலம் கடந்து தொடங்கி கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ நொடி நைனார் கோவில் பணிகள் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து வெயில், மழையில் கோவிலின் கட்டுமானங்கள் சிதைந்து வருகின்றன. கோவில் மண்டபங்கள், கோபுரங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. இங்கு வழிபட செல்வதற்கே அச்சமாக உள்ளதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

கோவிலில் வழிபாடு நடத்த அர்ச்சகர் இல்லாத நிலையில், அனைத்து நாட்களும் விளக்கு ஏற்றி, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் அலங்காரம் போன்றவைகளை பக்தர்கள் உதவியுடன், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் செய்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர், தனக்கு கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை கோவிலுக்கு செலவிட்டு வருகிறார்.

எதிர்பார்ப்பு

கோவில் மேற்கூரை, விமான கலசம் இல்லாத நிலையில் மழை காலங்களில் தண்ணீர் ஒழுகும் நிலையினை கருத்தில் கொண்டு பக்தர்கள் உதவியுடன் தற்காலிக இரும்பு கூரை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள பழமை வாய்ந்த நொடி நைனார் சிவன் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறியதாவது:-

முறைப்படி வழிபாடுகள்

திருவாரூரில் மிகவும் பிரசித்திப்பெற்ற சிவன் கோவிலான நொடி நைனார் கோவில் பராமரிப்பு இன்றி சிதைந்து வருகிறது. ஆனாலும் நித்ய கால பூஜை, மாதத்திற்கு இரு முறை பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, அன்னாபிசேகம், சிவராத்திரி போன்ற முக்கிய வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பக்தர்கள் உதவியினால் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆனாலும் இந்த கோவில் மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் இருப்பதால பக்தர்கள் உள்ளே வந்து வழிபடுவதற்கு அச்சப்படுகிறார்கள் இந்த கோவிலில் குடமுழுக்கு செய்ய பாலாலயம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளாகி விட்டது. இதுவரை எந்தவித திருப்பணிகளும் தொடங்கப்படவில்லை. கோவிலின் நான்கு புறங்களிலும் பூச்சுகள் பெயர்ந்து செங்கற்களாக காட்சி அளிக்கிறது. கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கருங்கற்கள் மட்டும் எஞ்சி உள்ளது. எனவே பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்தி, தினசரி முறைப்படி வழிபாடுகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story