டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வெளியூர் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ஜல்லிக்கற்களை, ஏற்றி செல்வதால் உள்ளூரில் இயங்கி வரும் வாகனங்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் கனரக வாகனங்களில் அரசு அனுமதித்துள்ள அளவில் மட்டுமே வாகனங்களில் ஜல்லிக்கற்களை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை அரசு அனுமதிக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நேற்று காலை முதல் டிப்பர் லாரிகளை இயக்குவதை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இவற்றில் பல நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு தர்ணா போராட்டமும் நடந்தது.
பாதிக்கப்படும் சூழல்
பெரம்பலூரில் லாரிகள் இயக்கப்படாததால் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு கட்டுமான பொருட்கள் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்க மாநில தலைவர் யுவராஜ் கூறும்போது, இத்தொழிலை நம்பி வாழும் கட்டுமான தொழிலாளர்களும், லாரி ஓட்டுனர்களும் வருமானமின்றி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் விற்கப்படும் மணலை வாங்கி வந்து அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக சேமிப்பு கிடங்கு அமைத்து, பின்னர் அதனை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும். இதுபோன்று மணலை விற்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு நியாயமான வாடகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.