செந்தில் பாலாஜியிடம் இன்று 2வது நாளாக விசாரணை..! 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை முடிவு..?


செந்தில் பாலாஜியிடம் இன்று 2வது நாளாக விசாரணை..! 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை முடிவு..?
x
தினத்தந்தி 8 Aug 2023 5:10 AM GMT (Updated: 8 Aug 2023 6:23 AM GMT)

12-ந்தேதி வரை காவலில் எடுத்துள்ள நிலையில், தினம் 50 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து புழல் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். அங்கு வைத்து சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள் கேட்க உள்ளனர்.

கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்டு, பதிலை வீடியோவில் பதிவு செய்ய உள்ளனர். 12-ந்தேதி வரை காவலில் எடுத்துள்ள நிலையில், தினம் 50 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி நேற்று இரவு 9.10 மணிக்கு சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

நேற்று அவரிடம் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரிடம் 2வது நாள் விசாரணை நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று காலை செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர்களை அமலாக்கத்துறை அழைத்து இருந்தது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

செந்தில் பாலாஜி அளிக்கும் பதிலை வைத்து அமலாக்கத்துறை அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை நகர்த்தும். பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை நடத்த வேண்டியிருந்தால், காவலை நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும். நீதிமன்றம் அனுமதி அளித்தால் தொடர்ந்து விசாரணை நடத்தும். அனுமதி மறுக்கப்பட்டால் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.


Next Story