கூடலூருக்குள் புகுந்த உடும்பு
கூடலூருக்குள் புகுந்த உடும்பை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்தநிலையில் கூடலூர் 1-ம் மைல் மூலவயல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு விலங்கு ஊருக்குள் புகுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாமிச உண்ணி விலங்கு வந்து உள்ளதாக அச்சம் அடைந்தனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த விலங்கு குறித்த வீடியோ வைரலானது. மேலும் ஊருக்குள் புகுந்தது ராட்சத பல்லி என வதந்தி பரவியது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூர் 1-ம் மைல் ஊருக்குள் புகுந்த விலங்கு, மாமிசங்களை உண்ணும் வகையை சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் வனத்துறையினர் உரிய ஆய்வு நடத்தி அந்த விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கூடலூர் 1-ம் மைல் பகுதியில் நுழைந்தது வயதான உடும்பு என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இரை தேடி திசை மாறி ஊருக்குள் வந்துள்ளது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தொடர்ந்து உடும்பு நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.