கிராம மக்கள் மறியல்
திட்டக்குடி அருகே தார் சாலை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்,
திட்டக்குடி அருகே உள்ள மருதத்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்திற்கு செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மயானத்துக்கு செல்லும் பாதையை தார் சாலையாக மாற்றி அமைத்து தர வேண்டி ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் நேற்று மருதத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மயானம் செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.