உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் மறியல்
கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் மறியல் செய்தனர்.
உசிலம்பட்டி,
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கைரேகை சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களை கல்வி ரீதியாக முன்னேற்றும் நோக்கில் கள்ளர் சீரமைப்புத்துறை உருவாக்கி கடந்த 1920-ம் ஆண்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் பள்ளிகள் நிறுவப்பட்டு இன்று வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிகளை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என அரசு அறிவித்தது.இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமத்தில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தமிழக அரசுக்கு எதிராகவும், கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.