கிராமமக்கள் திடீர் மறியல்
சிங்கனூரில் கிராமமக்கள் திடீர் மறியல் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
மயிலம்
மயிலம் அருகே சிங்கனூர் கிராமத்தில் திண்டிவனம்-ரெட்டனை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்கனவே இருந்த கழிவு நீர் கால்வாயை மூடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் கழிவுநீருடன் மழைநீர் இரண்டற கலந்து குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது. இதனால் துர்நாற்றம் வீசியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ரெட்டனை செல்லும் சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதன் பின்னர் மூடப்பட்ட கால்வாயை தோண்டி மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்ற வருகிறது.