அடிப்படை வசதிகள் இன்றி பரிதவிக்கும் கிராம மக்கள்


அடிப்படை வசதிகள் இன்றி பரிதவிக்கும் கிராம மக்கள்
x

பழனி அருகே அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

பழனியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் குதிரையாறு அணை அருகே அமைந்துள்ளது பூஞ்சோலை கிராமம். ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல பார்க்கும் பக்கமெல்லாம் பசுமை போர்த்திய வயல்கள் பளிச்சிடுகின்றன.

மனதை மயங்கடிக்கும் மலைஅழகு, வறண்டு போகாத அணை என கண்ணுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இக்கிராமம். பார்க்க பரவசமூட்டும் வகையில் கிராமம் அமைந்திருந்தாலும் இங்கு அடிப்படை வசதிகள் என்பது அறவே இல்லை.

அதாவது ஒரு குடியிருப்புக்கு தேவையான அடிப்படை வசதிகளின் ஒன்றான சாலை பூஞ்சோலை கிராமத்துக்கு இல்லை என்பது வேதனையான விஷயம். இந்த கிராமம் ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது என்றாலும், மக்கள் என்னவோ அன்றாட தேவைக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாப்பம்பட்டிக்கு தான் சென்று வருகின்றனர்.

அடிப்படை வசதி

இதில் பாப்பம்பட்டியில் இருந்து குதிரையாறு அணை வரை சாலை உள்ளது. ஆனால் அணை பகுதியில் இருந்து பூஞ்சோலை கிராமத்துக்கு மண்பாதை தான் உள்ளது. இந்த சாலை, பாதையில் போதிய தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஏனெனில் காட்டுப்பன்றி, செந்நாய், யானை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

பூஞ்சோலை கிராமத்துக்கு சாலை இல்லாததுபோல், ஊருக்கு செல்லும் வழியில் உள்ள குதிரையாற்றின் குறுக்கே மேல்மட்ட பாலமும் கிடையாது. ஆற்றை கடந்து செல்ல மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் குதிரையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது தற்காலிக தரைபாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பூஞ்சோலை கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் நிலை கடந்த பல ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. எனவே பூஞ்சோலை பகுதிக்கு பாலம், சாலை வசதி செய்து தர வேண்டும் என அங்குள்ள மக்கள், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தீவு போல் மாறும்

செல்வம்:- நாடு எவ்வளவோ வளர்ந்துவிட்ட போதிலும், இன்னமும் சாலையே இல்லாத கிராமம் என்றால் அது எங்கள் பகுதியாகத்தான் இருக்கும். மழை காலம் வந்துவிட்டால் இங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே உள்ளனர். ஏனெனில் பாலம் நீரில் மூழ்கிவிட்டால் கிராமம் தனித்தீவுபோல் மாறிவிடும். கிராமத்தில் இருந்து எங்குமே செல்ல முடியாது. வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரிலும் இதுபோல் நடந்தது. அந்த நேரங்களில் கயிற்றை கட்டிதான் மக்கள் சென்று வந்தனர். எனவே பூஞ்சோலை கிராமத்துக்கு சாலை, பாலம் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செவி சாய்க்காத அதிகாரிகள்

நல்லாக்கவுண்டர் (விவசாயி) : பூஞ்சோலை கிராம பகுதியில் பாப்பம்பட்டி, குதிரையாறு பகுதி விவசாயிகளுக்கும் தோட்டங்கள் உள்ளது. இங்கு விளையும் நெல், மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகளை விவசாயிகள் டிராக்டரில் ஏற்றி கொண்டு வருகின்றனர். ஆனால் கிராமத்துக்கு சாலை, மேல்மட்ட பாலம் இல்லாததால் மழை காலத்தில் விளைபொருட்களை கொண்டு செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது.

ஆண்டுதோறும் பாலம் வெள்ளநீரில் அடித்து செல்வதும், பின்னர் அதை தற்காலிகமாக சீரமைப்பதும் மட்டுமே நடந்து வருகிறது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுபற்றி அரசு அதிகாரிகள் யாரும் செவி சாய்ப்பதில்லை. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை, மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-----------


Next Story