திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்


திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்
x

திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் 8 வயது சிறுமி பலியானார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர்

திருப்பதி கோவிலுக்கு சென்றனர்

சென்னை மதுரவாயல் கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய மனைவி, மகள்கள் 2 பேர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவின் உறவினர் மாரிமுத்து (40) மற்றும் அவருடைய குடும்பத்தினர் என 8 பேர் நேற்று முன்தினம் காலை காரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு சென்றனர்.

திருப்பதியில் சாமி தரிசனம் முடிந்து விட்டு நள்ளிரவில் அனைவரும் காரில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கார் கவிழ்ந்தது

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த தாசிரெட்டி கண்டிகை அருகில் கார் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் உள்ள நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிறுமி பலி

விபத்தில் படுகாயமடைந்த ராஜாவின் இளைய மகள் யாழினி (8)யை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 7 பேரில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 4 பேரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் திருத்தணியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story