பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றியது ஏன்? மு.க. ஸ்டாலின் விளக்கம்


பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றியது ஏன்? மு.க. ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2024 6:43 AM GMT (Updated: 23 Feb 2024 12:25 PM GMT)

நிதி அமைச்சராக பதவி வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆண்டு மே மாதம் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஐ.டி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சென்னை,

சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி.யிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி.யிலும் படித்தவர் பழனிவேல் தியாகராஜன்.

தி.மு.க. ஆட்சியில் முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர், பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன். அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம்" என்றார்.


Next Story