எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே பணம் வழங்குகிறது - இலங்கை பிரதமர்


எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே பணம் வழங்குகிறது - இலங்கை பிரதமர்
x

எரிபொருள் வாங்க இந்தியாவை தவிர வேறு யாரும் பணம் வழங்குவதில்லை என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கை கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டுவர இலங்கை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளிடமும் உதவி வழங்கும்படி இலங்கை கோரிக்கை விடுத்து வருகிறது. சர்வதேச அமைப்புகளிடமும் இலங்கை உதவி கோரி கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கோரியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விம்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருந்துப்பொருட்கள், பணம் என 27 ஆயிரம் கோடி ரூபாய் (3.5 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு கடனுதவி அளித்துள்ளது.

இதனிடையே, அரசு மின் விநியோக அமைப்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பதாகைகளை பிடித்து நீங்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால், தடை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தீர்களானால், இந்தியாவிடம் உதவி கேளுங்கள் என என்னிடம் கேட்காதீர்கள். நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க எந்த நாடும் பணம் கொடுக்கவில்லை. இந்தியா மட்டுமே நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க பணம் கொடுக்கிறது. இந்தியாவிடமிருந்து நாம் வாங்கும் கடனின் அளவு அதன் எல்லையை நெருங்கி விட்டது. அதை நீட்டிப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்துகொண்டே இருக்க முடியாது. நமக்கு ஏன் உதவிகளை செய்ய வேண்டுமென இந்தியாவில் இருந்து சிலர் கேட்கின்றனர். முதலில் அவர்கள் உதவி செய்யும் முன் நமக்கு நாமே உதவி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றனர்' என்றார்.


Next Story