அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) : இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவர்...


அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) : இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவர்...
x

நபி (ஸல்) அவர்களிடம் உலக ஆதாயம், வாழ்வாதாரம், உணவு, உடை குறித்து யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்கு கொடுக்க மறுத்ததும் கிடையாது; கொடுக்க முடியாமல் ‘இல்லை’ என்ற வார்த்தையை அவர் கூறியதும் கிடையாது.

"அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை" (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

"ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள்" (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

"நபி (ஸல்) அவர்கள், ஹூனைன் போர் நடந்த அன்றைய தினத்தில் ஸப்வான் பின் உமய்யாவுக்கு முதலில் நூறு ஒட்டகங்களை வழங்கினார்கள். பிறகு, இன்னும் நூறு ஒட்டகங்களை வழங்கினார்கள். பிறகு, மேலும் நூறு ஒட்டகங்களை வழங்கினார்கள். (முந்நூறு ஒட்டகங்களைப் பெற்றுக் கொண்ட) அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (அன்று தாராளமாக) எனக்கு வழங்கினார்கள். அப்போது அவர்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் வெறுப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எனக்கு நன்கொடைகள் வழங்கிக் கொண்டே வந்து மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்களாய் ஆகிவிட்டார்கள்' என்று கூறினார்". (அறிவிப்பாளர்: சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), நூல்: முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட நபி மொழிகளும் நபி (ஸல்) அவர்களின் தாராளத் தன்மைக்கும், தயாளத் தன்மைக்கும், வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல் தன்மைக்கும் சிறந்த ஒரு சில முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும். இன்னும் அவர்களின் கொடைத்தன்மைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள், இந்த உலகத்தில் கிட்டத்தட்ட 63 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். தமது வாழ்நாளில் அவர் 'இல்லை' என்ற வார்த்தையை வேறு வேறு தளங்களில் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தவிர்த்தும் இருக்கலாம்.

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை" என்பது போன்று 'இல்லை' எனும் வார்த்தையை வேறு வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி இருக்கலாம்.

அதேநேரத்தில், நபி (ஸல்) அவர்களிடம் உலக ஆதாயம், வாழ்வாதாரம், உணவு, உடை குறித்து யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்கு கொடுக்க மறுத்ததும் கிடையாது; கொடுக்க முடியாமல் 'இல்லை' என்ற வார்த்தையை அவர் கூறியதும் கிடையாது.

தமது வீட்டுவாசல் வரைக்கும் வந்து கேட்பவர் எவரையும் விரட்டவுமில்லை; வெறுங்கையாக அனுப்பியதும் இல்லை. இதைத்தான் இறைவன் அவருக்கு போதித்தான்.

"யாசிப்போரை விரட்டாதீர்" (திருக்குர்ஆன் 93:10)

"ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவருக்கு உணவளிக்க தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று பதிலளித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களை நோக்கி, 'இவரை தம்முடன் உணவில் சேர்த்துக் கொள்பவர் யார்?' என்று கேட்க, ஒரு அன்சாரித் தோழர் அவரின் உணவுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்". (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

"ஒரு பெண்மணி தமது கையால் நெய்த ஒரு சால்வையை நபி (ஸல்) அவர்களுக்கு அணிவிப்பதற்காக கொடுத்தார். நபி (ஸல்) அவர்களும் அதைப் பெற்று, வீட்டுக்குச்சென்று அதை கீழாடையாக அணிந்து வந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், "இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்களும் வீட்டிற்குச் சென்று அதை கழட்டி, சுருட்டி கேட்டவருக்கு வழங்கிவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், 'நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக நபி திருப்பியனுப்பமாட்டார் என தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே' என்றனர். அதற்கு அவர், 'நான் மரணிக்கும் நாளில் அது எனக்கு ஆடையாக வேண்டும் என்பதற்காகவே கேட்டேன்' என்றார். அதுவே அவரின் மரண ஆடையாக ஆனது". (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)


Next Story