டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை..!!


டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை..!!
x

Image Courtesy : AFP

650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப் 145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 284 ரன்களில் ஆட்டமிழந்தது. இதை அடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு இடத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.


Next Story