சூர்யகுமார் நிச்சயம் நல்ல நிலையை எட்டுவார் - பயிற்சியாளர் டிராவிட் கருத்து


சூர்யகுமார் நிச்சயம் நல்ல நிலையை எட்டுவார் - பயிற்சியாளர் டிராவிட் கருத்து
x

சூர்யகுமாரின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சென்னை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடக்கிறது. அதற்கு முன்பாக உள்ளூரில் இந்த சீசனில் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. அதில் 8 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். நாளைய (இன்று) ஆட்டம் முடிந்ததும் நிறைய விஷயங்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும். அதை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் ஆட வேண்டி இருப்பதால் தான் இப்போது பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவனில் பல்வேறு மாற்றங்களை செய்து களம் காணுகிறோம். நிலைமைக்கு தக்கபடி மாற்றம் செய்யும் வகையில் அணியில் வீரர்கள் வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 17-18 வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதில் சிலர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டி உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய் விட்டது. அனேகமாக 4-வது வரிசையில் அவருக்கு தான் அண்மை காலமாக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இல்லாததால் சூர்யகுமார் அந்த வரிசையில் ஆடுகிறார். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் 'டக்-அவுட்' ஆனாலும் உண்மையில் அவரது பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவர் இரண்டு நல்ல பந்தில் தான் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

ஐ.பி.எல்.-ல் மட்டும் 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அதே சமயம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதில்லை. 50 ஓவர் கிரிக்கெட்டில் இப்போது தான் நிறைய கற்று வருகிறார். எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் நல்ல நிலையை எட்டுவார்."

இவ்வாறு டிராவிட் கூறினார்.


Next Story