தெற்காசிய கால்பந்து: இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வீரர்கள் - பயிற்சியாளர்கள் மோதல்...!!


தெற்காசிய கால்பந்து: இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வீரர்கள் - பயிற்சியாளர்கள் மோதல்...!!
x

image courtesy;ANI

போட்டியின் முதல்பாதியின் இறுதி நிமிடங்களில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூருவில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. இந்த தொடர் இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேற்று மோதியது.இந்த ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. கேப்டன் சுனில் செட்ரி ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார்.

இந்த ஆட்டத்தின் முதல்பாதியின் இறுதி நிமிடங்களில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் ஆடுகளத்துக்கு வெளியே சென்ற பந்தை பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பால் எடுத்து சக வீரரை நோக்கி எறிய முயன்றார். அப்போது ஆடுகளத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பந்தை வெளியே அடித்தது பாகிஸ்தான் வீரர் தான். எனவே பந்தை எங்கள் வசம் கொடுங்கள் என்று பறிக்க முயன்றார்.

இதன் தொடர்ச்சியாக களத்தில் இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

உடனடியாக நடுவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அத்துடன் போட்டி நடுவர் பிராஜ்வால் சேத்ரி, பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்குக்கு சிவப்பு அட்டை காண்பித்தார். இதனை தொடர்ந்து இகோர் ஸ்டிமாக் வீரர்கள் இருக்கும் பெஞ்சில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.


Next Story