சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: இந்திய அணி "சாம்பியன்"


சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: இந்திய அணி சாம்பியன்
x
தினத்தந்தி 12 Aug 2023 5:05 PM GMT (Updated: 12 Aug 2023 9:29 PM GMT)

ஆசியக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சென்னை,

6 அணிகள் பங்கேற்ற 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

இதில் கடைசி நாளான நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 9-வது இடத்தில் உள்ள மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன. 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஜூக்ராஜ் சிங் முதல் கோல் போட்டார். 14-வது நிமிடத்தில் மலேசிய அணி வீரர் அஸ்ராய் அபுகமல் பதில் கோல் திருப்பி சமநிலையை ஏற்படுத்தினார்.

ஹர்மன்பிரீத் சிங்

அத்துடன் தொடர்ந்து இந்திய அணியின் கோல் எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவிய மலேசிய அணியினர் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அதிர்ச்சி அளித்தனர். பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் ரஹிம் 18-வது நிமிடத்திலும், முகமது அமினுதீன் 28-வது நிமிடத்திலும் இந்த கோலை அடித்தனர். இதனால் முதல் பாதியில் மலேசிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன் பிறகு இந்திய அணியினர் பதில் கோல் திருப்ப ஆக்ரோஷமாக ஆடினர். அதன் பலனாக 45-வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இந்த தொடரில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த 9-வது கோல் இதுவாகும். அடுத்த நிமிடத்தில் இந்திய அணி வீரர் குர்ஜந்த் சிங் பீல்டு கோல் திருப்பினார். இதனால் இந்திய அணி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்திய அணி 'சாம்பியன்'

56-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது. மேலும் கோல் அடிக்க இரு அணிகளும் எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி மகுடம் சூடுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே இந்தியா 2011, 2016, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது. தோல்வி கண்ட மலேசிய அணி முதல்முறையாக வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இதற்கு முன்பு அந்த அணி 5 முறை வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதின. உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணி தனது துடிப்பான தாக்குதலின் துணையுடன் 5-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் அணியான தென்கொரியாவை வீழ்த்தியது. அத்துடன் லீக் ஆட்டத்தில் அந்த அணியிடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. 3 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி 5-வது இடமும், சீனா அணி கடைசி இடமும் பெற்றன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இறுதிப்போட்டியை தொடங்கி வைத்து போட்டியை ரசித்து பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளிப்பு விழாவிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கினார். மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு பதக்கம் அணிவித்தனர். சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் முகமது தயப் இக்ராம், ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே, முன்னாள் உலக செஸ் சாம்பியன் விசுவநாதன் ஆனந்த், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story