அரிய வகை ரத்த தானம் செய்வதற்காக வியட்நாம் பறந்த மும்பை ஆசிரியர், என்ஜினீயர்

ரத்த தானம் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்ற மும்பையை சோ்ந்த ஆசிரியர், என்ஜினீயர் வியட்நாம் வரை சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-02-21 18:45 GMT

மும்பை, 

ரத்த தானம் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்ற மும்பையை சோ்ந்த ஆசிரியர், என்ஜினீயர் வியட்நாம் வரை சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

அரியவகை 'பாம்பே' ரத்தம்

வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது. திடீரென குழந்தைக்கு உடல்நிலை மோசமானது. குழந்தையை காப்பாற்ற அரியவகை 'பாம்பே' வகை ரத்தம் தேவைப்பட்டது. இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் மூலமாக போரிவிலியை சேர்ந்த ஆசிரியர் பிரவீன் ஷிண்டே, என்ஜினீயர் ஆஷிஸ் ஆகியோர் பாம்பே ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 2 பேரும் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள். எனவே அவர்கள் வியட்நாம் சென்று ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

வியட்நாம் சென்றனர்

வியட்நாம் இந்திய தூதரகம், தன்னார்வ அமைப்பினர் உடனடியாக ஆசிரியர், என்ஜினீயர் வியட்நாம் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தனர். இதனால் 24 மணி நேரத்தில் பிரவீன் ஷிண்டே, ஆஷிஸ் வியட்நாம் சென்றனர். அவர்கள் குழந்தைக்கு ரத்ததானமும் செய்தனர். துரதிருஷ்டவசமாக குழந்தைக்கு அவர்களின் ரத்தத்தை செலுத்த முடியாமல் போனது. இது அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

எனினும் உள்ளூர்வாசி ஒருவரிடம் இருந்து பெற்ற ரத்தத்தை செலுத்தி டாக்டர்கள் குழந்தையை காப்பாற்றினர். ரத்தம் செலுத்த முடியாமல் போனாலும், குழந்தையை காப்பாற்ற மும்பையில் இருந்து வியட்நாம் வரை சென்ற ஆசிரியர் பிரவீன் ஷிண்டே, என்ஜினீயர் ஆஷிசின் செயல் குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது.

பாம்பே ரத்தம் என்றால் என்ன?

ஏ-பாசிட்டிவ், நெகட்டிவ், பி-பாசிட்டிவ், நெகட்டிவ், ஓ-பாசிட்டிவ், நெகட்டிவ், ஏபி-பாசிட்டிவ், நெகட்டிவ் போன்ற ரத்த வகைகள் தான் அனைவருக்கும் தெரியும். 'பாம்பே' என்கிற ரத்த வகை மக்களுக்கு அரிதாகவே இருக்கிறது. அதேபோல், பாம்பே ரத்த வகை குறித்து மக்கள் அறிந்திருப்பது குறைவுதான். பாம்பே ரத்த வகையை, 'ஓஎச் பாசிட்டிவ்' என்று குறிப்பிடுகிறார்கள். பாம்பே ரத்த வகை, இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயில் 1952-ம் ஆண்டு டாக்டர் பெண்டே என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வகை ரத்தம் 7,500 பேரில் ஒருவருக்குதான் இருக்கும் என மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்