பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்தது; அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா?

பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

Update: 2022-12-18 18:36 GMT

பணவீக்கம்

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைச்சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார். பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

புதுக்கோட்டையை சேர்ந்த பொருளாதார துறை கவுரவ விரிவுரையாளர் வீரய்யன்:- ''விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம் மட்டும் காரணம் என கூறமுடியாது. பல்வேறு காரணிகள் உள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் ஒரு காரணமாகும். பொருட்களின் தேவை அதிகரிக்கும் போதும், வாங்கும் சக்தி குறையும் போதும் விலைவாசி உயர்வு காணப்படும். இதனை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கலாம். மேலும் மத்திய, மாநில அரசுகளும் தீர்வு காணலாம். உலக பொருளாதாரம் அடிப்படையிலும் விலைவாசி உயர்வு காணப்படுகிறது. பொதுமக்களின் வருமானத்திற்கு ஏற்ப பொருட்களின் வாங்கும் சக்தியின் அளவும் கணக்கிடும் போது அதிகமானால் விலைவாசி உயரும்.''

கொரோனா பெருந்தொற்று

விராலிமலை தாலுகா, பேராம்பூரை சேர்ந்த முத்துக்குமார்:- கொரோனா பெருந்தொற்றால் மோசமான பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதாரத்தை மீட்பது பெரும் சவாலாக மாறி உள்ளது. கொரோனாவால் தொழிலாளர்களின் வருமானம் குறைந்து வருவதை பார்த்தால் இது முன்பை விட சாமானிய மக்களுக்கு அதிக சிரமத்தை அளித்து வருகிறது.

ஆனால் அதற்கேற்ற வகையில் மக்களின் வருமானம் உயர்ந்திருக்கிறதா? என்றால் இல்லை என்றே கூறலாம். மத்திய-மாநில அரசுகள் தற்போது விலைவாசி உயர்வுக்கு உலக அளவில் சூழ்நிலை காரணம் காட்டி திசை திருப்புகிறது. மத்திய அரசு வரி நிர்ணயம் செய்யும்போது கூட நடுத்தர மக்களை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

சமாளிக்க முடியவில்லை

கறம்பக்குடி பட்டமாவிடுதியை சேர்ந்த இலக்கியா:- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதித்து உள்ளது. அரிசி முதல் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. பணவீக்கம், வளர்ச்சி விகிதம் குறைவு என்றெல்லாம் சொல்லப்படும் காரணங்கள் சாமானியர்களுக்கு புரியாது. வாங்கும் திறன் உயராமல் விலை மட்டும் உயர்வதால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை.

தாங்க முடியாத சுமை

தட்டாவூரணியை சேர்ந்த பாக்கியம்:- மிளகாய், வெங்காயம் போன்ற பொருட்களின் விலையை நினைத்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது. அன்றாடம் வாழ்க்கையை நகர்த்த நடுத்தர மற்றும் வசதி உள்ளவர்களே சிரமப்படும் போது எங்களை போன்று கூலி வேலை பார்ப்பவர்கள், தொழிலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாத நிலையில் குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு, விழாக்கள் என எதையும் நினைத்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வு தாங்க முடியாத சுமையை கொடுத்து உள்ளது.

கட்டுப்படுத்த வேண்டும்

வடக்கு தெருவை சேர்ந்த நாடியம்மாள்:- அரிசி முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளதால் விலைவாசி விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. ஆனால் மத்திய அரசு விலைவாசியை கட்டுப்படுத்தாமல் இருப்பது வேதனையாக உள்ளது. போதிய வருமானம் இல்லை, ஆனால் செலவு அதிகம். இதனால் குடும்பத்தை நடத்தவே சிரமமாக உள்ளது. பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது, இந்தியா வளர்கிறது என கூறினார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் அன்றாட சாப்பாட்டிற்கு திண்டாடும் நிலைதான் உள்ளது. எனவே ஏழைகள் நிம்மதியாக வாழ விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் ஏழை, எளியவர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை.

ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும்

அறந்தாங்கியை சேர்ந்த மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொருளாளர் சலீம்:- கடந்த நவம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.85 சதவீதம் குறைந்துள்ளதால் கண்டிப்பாக விலைவாசி உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் மக்களின் வாங்கும் திறன் கண்டிப்பாக குறையும். அதற்கு ஜி.எஸ்.டி.யும் ஒரு காரணம். மக்கள் பயன்படுத்தக்கூடிய, அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். அல்லது எல்லா மருந்துகளுக்கும் ஒரே ஜி.எஸ்.டி.யை கொண்டு வர வேண்டும். இன்று மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதால் பொதுவாக வணிகத்தில் மந்த நிலை காணப்படுகிறது. கடந்த 2 மாதங்களை ஒப்பிடும்போது இந்த மாதம் பொருட்களின் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. இது மத்திய அரசால் கண்டிப்பாக சரி செய்யப்பட வேண்டும்.

பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:- இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது. பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும். அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பண வீக்கம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை இனி உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே போதும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

'பணவீக்கம்' வார்த்தையை எளிமைப்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

தமிழில் சில வார்த்தைகள் அலங்காரத்துடன் இருக்கும். இந்த வார்த்தைகளின் அர்த்தம் படித்தவர்கள் மனதில் சட்டென்று பதிந்தாலும் படிக்காத பாமர மக்களுக்கு உடனே புரியாது. பொருளாதார மேதைகள் பணவீக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கிய நேரத்தில் பாமர மக்கள் அதன் உள் அர்த்தம் புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விலைவாசி உயர்வுதான் பணவீக்கம் என்று 'தினத்தந்தி' மூலம் மக்களுக்கு தெளிவுப்படுத்தியவர் மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்