பல்கலைக்கழகத்தில் பொருட்கள் 'ஜப்தி' முயற்சி

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கோர்ட்டு ஊழியர்கள் வந்து பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-04 18:00 GMT

காலாப்பட்டு

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கோர்ட்டு ஊழியர்கள் வந்து பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட்டில் வழக்கு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு கருத்தரங்கம் அமைக்க தனியார் நிறுவனம் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கருத்தரங்கம் கட்ட ஒதுக்கிய நிதி குறைவாக இருப்பதாகவும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தனியார் கட்டுமான நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதால், தனியார் நிறுவனம் புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, கூடுதலாக ரூ.4 கோடி 50 லட்சம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் தவணை முறையில் இதுவரை ரூ.1 கோடியே 79 லட்சத்தை செலுத்தி உள்ளது.

ஜப்தி முயற்சி

கடந்த மாதத்திற்கான தவணை தொகையை வழங்காததால், கோர்ட்டு ஊழியர்கள் பல்கலைக்கழகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய சென்றனர். அவர்களை, பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர்கள் உள்ளே விட மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், கோர்ட்டில் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சத்தை இன்று பல்கலைக்கழக நிர்வாகம் செலுத்தி விட்டதாக ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். பல்கலைக்கழகத்தில் பொருட்கள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்