ப்ளாஷ்பேக் 2025: உலக ஆச்சரியங்களும், அதிசய நிகழ்வுகளும், வைரலான வீடியோக்களும்
உலக அளவில் நடந்த ஆச்சரியம் தரும் நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள், அவற்றிற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் வெளியிடப்பட்டு உள்ளன.;
ஜனவரி 8, 2025
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. இதன்படி, 6 சகோதரர்கள் மணமக்கள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காமல் 6 சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. 100 விருந்தினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சமூக நடைமுறைகளுக்கு மாறாக, மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். இந்த திருமணம் அதிக செலவில்லாமல், குறைந்த செலவில் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்காக மணமகன்கள் ஓராண்டாக திட்டமிட்டு வந்துள்ளனர். ஏனெனில், அவர்களின் இளைய சகோதரன் 18 வயது நிறைவடைந்த பின்னர் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்திருந்தனர்.
ஜனவரி 13, 2025
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் குளிர் பரவி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு சிலர் சட்டை மற்றும் டை அணிந்தபடியும், சிலர் குளிருக்கு ஏதுவாக கம்பளி ஆடை அணிந்தும் வந்திருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடியும், சிரித்து கொண்டும் இருந்தனர்.
ஆண், பெண் பாலின வேற்றுமையின்றி அனைவரும் சகஜத்துடன் காணப்பட்டனர். இதேபோன்று வயது வித்தியாசமின்றியும் ஆண்களும், பெண்களும் மேலாடைகளை மட்டும் வகை வகையாக அணிந்தபடி, ஆனால் கீழே உள்ளாடை தவிர்த்து வேறெதுவும் அணியாமல் காணப்பட்டனர்.
ஜனவரி 26, 2025
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர் கமலா ஹாரிஸ். இந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ், அவருடைய கணவர் டக் எம்ஹாப் உடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார். இதன்படி, அவர்கள் இருவரும் கலிபோர்னியா மாகாணத்தில் வெஸ்ட்உட் பகுதியில் உள்ள ராஞ்ச் மார்கெட் ஆசியன் மளிகை கடைக்கு சென்றனர்.
இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்களில் சிலர் வீடியோ காட்சிகளை கவனித்து, கமலா ஹாரிசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படி அந்த வீடியோவில் என்ன உள்ளது? என முதலில் தெரியவில்லை. நன்றாக கவனித்தபோது விசயம் தெரிய வந்தது.
ஷாப்பிங் செய்ய சென்ற ஹாரிஸ், உடன் பிளாஸ்டிக் பைகளை வைத்திருக்கிறார். 2019 தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அதனை தடை செய்ய வேண்டும் என பேசினார்.
ஆனால், புதிய வீடியோவில் பிளாஸ்டிக் பைகளுடன் காணப்பட்ட ஹாரிசுக்கு கண்டன பதிவுகள் வெளியிடப்பட்டன. ஒருவர், நான் கூட பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என நினைத்து விட்டேன் என்றும், மற்றொருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வேண்டும் என ஹாரிஸ் விரும்பினார். அதனை நான் நினைவுகூர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஜனவரி 27, 2025
பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, வானில் இருந்து மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை தாக்கியது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.
பிப்ரவரி 9, 2025
ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிய இஸ்ரேல் பணய கைதிகள் சிலரின் அவல நிலை பற்றிய செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், பாலஸ்தீனிய கைதியின் அவல நிலையை பற்றிய செய்தியும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலிடம் சிக்கிய பாலஸ்தீனிய கைதி இப்ராகிமின் முகம் மற்றும் உடல் ஆகியவை ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான அடையாளத்துடன் உள்ளன. அவர் ஆசிரியர் பணியை செய்து வந்தவர் என கூறப்படுகிறது.
பிப்ரவரி 26, 2025
காசாவை அமெரிக்கா தன்வசப்படுத்தி, எடுத்து கொண்டால் அதன்பின்னர் எப்படி இருக்கும் என்பது பற்றிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.
பிப்ரவரி 15, 2025
சிலி நாட்டின் தெற்கே பாடகோனியா மண்டலத்திற்கு உட்பட்ட மேகல்லன் ஜலசந்தி பகுதியில் டெல் சிமன்காஸ் (வயது 49) என்பவர், அவருடைய மகன் ஆத்ரியன் சிமன்காஸ் (வயது 24) என்பவருடன் படகில் சவாரி செய்துள்ளார். அவர்கள் இருவரும் தனித்தனியாக படகுகளில் சென்று, சாகச பயணம் மேற்கொண்டபோது, திகில் ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
நடுக்கடலில் பயணித்தபோது, திடீரென திமிங்கல கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.
உருவத்தில் மிக பெரிய, ஹம்பேக் வகையை சேர்ந்த அந்த திமிங்கலங்களில் ஒன்று, டெல்லின் மகனை படகுடன் சேர்த்து விழுங்கியுள்ளது. இதனை டெல் வீடியோவாக எடுத்திருக்கிறார். எனினும், சில விநாடிகளில் ஆத்ரியனை அந்த திமிங்கலம் வெளியே துப்பி விட்டது. அந்த வீடியோ வைரலானது.
மார்ச் 13, 2025
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஊரபிண்டா பகுதியில், பைத்தான் வகை பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் விளையாடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஏறக்குறைய ஒரு மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட அந்த பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தி உள்ளனர். இருபுறமும் நின்று கொண்டு 2 சிறுவர்கள் கையால் பிடித்து கொள்ள, மற்றொரு சிறுவன் ஸ்கிப்பிங் ஆடுகிறான். அப்போது அந்த சிறுவர்களில் ஒருவன் இது கருப்பு தலையுடன் கூடிய பைத்தான் பாம்பு என கூறுகிறான்.
சிறுவர்கள் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ ஒன்றும் வைரலானது.
மார்ச் 16, 2025
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாஷிங்டன் அவென்யூ பகுதியில், டெஸ்லாவின் தயாரிப்பான சைபர்டிரக் எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் ஒன்றை அவி பென் ஹமோ என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் சாலையோரம் அந்த டிரக்கை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
அப்போது, சுபாரு எனப்படும் ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த மைக்கேல் லூயிஸ் (வயது 42), தன்னுடைய காரில் இருந்து கீழே இறங்கி சென்றார். அந்த டிரக் மீது ஸ்வஸ்திகா அடையாளம் ஒன்றை வரைந்து விட்டு சென்றார். இதனை தூரத்தில் இருந்து கவனித்த அவி, உடனடியாக மைக்கேலின் கார் முன்னே சென்று குறுக்காக நின்று மைக்கேலை காரை விட்டு வெளியே வரும்படி கூறினார்.
ஆனால், காரில் இருந்து மைக்கேல் வெளியே வந்ததும், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, காரை அப்படியே விட்டு விட்டு, மைக்கேல் தப்பி விட்டார். ஒன்றரை மணிநேரம் கழித்து காரை எடுப்பதற்காக திரும்பவும் அந்த பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். முட்டாள் மக்கள் என இதனை சாடிய எலான் மஸ்க், எக்ஸ் சமூக ஊடகத்தில் கண்டன பதிவை வெளியிட்டு உள்ளார். லூயிஸ், அவி பென் வாக்குவாதம் தொடர்பான வீடியோவும் வைரலானது.
மார்ச் 16, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இணையும் வீடியோவை மஸ்க் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.
மார்ச் 26, 2025
தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீயின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், காட்டுத்தீ பாதிப்புக்கு 24 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளன. இதனால், 27 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ சியோன்டியுங்சான் மலை பிரதேசத்திலும் பரவியது. இதில், உன்ராம்சா என்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த கோவில் ஒன்று சேதம் அடைந்துள்ளது. இதனால், தென்கொரியாவில் கலாசார இழப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று, 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கவுன்சா என்ற மற்றொரு கோவிலுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. மதிப்புமிக்க 2 கட்டிடங்கள் உள்பட 20-க்கும் கூடுதலான கட்டிடங்களும் தீயில் எரிந்து விட்டன.
காட்டுத்தீயால் கோவில் பாதிப்புக்கு உள்ளாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றும் வைரலானது.
மார்ச் 30, 2025
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசித்து வருபவர் கார்லி எலெக்ட்ரிக் (வயது 30). புயல் மற்றும் மின்னல் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதில் சிறு வயது முதல் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். வானிலை மீது கொண்ட விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், மின்னல் சார்ந்த 3 கருத்துருக்களுடன் பச்சை குத்தியிருக்கிறார்.
ஆனால், இதெல்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையே. 2023-ம் ஆண்டு டிசம்பரில் புயலை படம் பிடிப்பதற்காக வீட்டுக்கு வெளியே ஓடியபோது அந்த சம்பவம் நேர்ந்தது.
அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உள்ளது. இதுபற்றி கார்லி கூறும்போது, போதை மருந்து கொடுத்ததுபோன்று அப்போது உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்கு பின்னர், கால்களில் உணர்வனைத்தும் இழந்தது போன்று இருந்தது.
வியர்த்து கொட்டியது. மயக்கம் வருவது போன்ற உணர்வுடன், பரவசத்தில் இருப்பது போல் இருந்தது. ஓர் அங்குலம் கூட நகர முடியவில்லை என கூறுகிறார்.
சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்த பின்னர், அவருடைய கண்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில், பச்சை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2017-ம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் மின்னல் தாக்கிய பின்னர் பார்வை மேம்பட்டு விட்டது என கூறினார். அதன்பின்பு அவர் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
ஏப்ரல் 6, 2025
இங்கிலாந்தின் 2-வது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட விவகாரங்களை முன்னிட்டு அவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.
இதனால், குப்பைகள் சாலைகள் முழுவதும் தேங்கின. அதில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் காற்றில் பரவி மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியது.
இதனால், மொத்தம் 17 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்தன. ஏறக்குறைய 400 பேர் வரை இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்னர். அந்நகரில் 11 லட்சம் பேர் வரை குடியிருப்புவாசிகள் உள்ளனர். அவர்களின் வீடு வழியே குப்பைகளை சேகரிக்கும் ஏதேனும் ஒரு வாகனம் சென்றால் மக்கள் திரளாக ஓடி சென்றனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகளை கிளறுவதற்காக பூனை அளவுள்ள எலிகளும், நரிகளும் மற்றும் பூனைகளும் சுற்றி திரிந்தன. குப்பைகளில் புழுக்களும் நெளிந்து சென்றன. இதுபற்றிய வீடியோவும் வைரலானது. இதேபோன்று குப்பைகளை சேகரிக்க சென்றவர்களை எலிகள் விரட்டி செல்லும் மற்றொரு வீடியோவும் வைரலானது.
இதனால், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் புயலை கிளப்பின. ஸ்டார்மரும் இதனை ஒப்பு கொண்டிருக்கிறார். இது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 12, 2025
சிங்கப்பூரில் கட்டிட புதுப்பித்தல் வேலைக்காக சில தொழிலாளர்களை இறக்கி விட்டு, விட்டு சரண்ராஜ் லாரியில் திரும்பி கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது, இந்த பள்ளி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது. குழந்தைகள் இருமியபடியும், சுவாசிக்க போராடியபடியும் காணப்பட்டனர்.
சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரும் தங்களுடைய சொந்த பாதுகாப்பை விடுத்து, மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுத்தனர். உடனடியாக கட்டிடத்தின் சாரம் மற்றும் ஏணியை பயன்படுத்தி, மேலே ஏறி சென்று குழந்தைகளை மீட்டனர். அவர்கள், தக்க சமயத்தில் சமயோசிதத்துடன் சிந்தித்து, துணிச்சலாக செயல்பட்டு, குழந்தைகள் உள்ளிட்ட பலரையும் பாதுகாத்ததற்காக சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு சான்றிதழ் அளித்து கவுரவம் வழங்கியுள்ளது.
ஆட்கள் திறனுக்கான அமைச்சகத்தின் நாணயங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தீ விபத்தில் சிக்கிய 22 பேரில் 16 பேர், 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். மற்ற அனைவரும் 23 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவத்தில், தீப்பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விதிகளை மீறியவர்கள் கண்டறியப்பட்டால், 2 லட்சம் சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.
மே 2, 2025
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட தயாரானது. எனினும் அது புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மாறி மாறி கூச்சலிட்ட அந்த பெண்ணை, விமான பணியாளர் ஒருவர் கீழே தரையில் தள்ளி, கட்டுப்படுத்தினார்.
இதன் பின்பு அந்த பெண் இருக்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மற்றொரு பயணி எழுந்து நின்று சத்தம் போட்டார். இதனால், விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் மற்றொரு பயணியுடன் சேர்த்து விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் விமானம் புறப்படுவதில் 2 மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டது. மற்ற பயணிகளும் அவதியடைந்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. லட்சக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்தனர்.
மே 18, 2025
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் ஏ321 விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. அதில், 199 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், விமானி அறையில் இருந்து வெளியேறிய விமானி அவசரத்திற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். இதனால், விமானம் முழுவதும் துணை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது, துணை விமானிக்கு லேசாக மயக்கம் வந்துள்ளது. அவர், அப்படியே மயக்கத்தில் சரிந்து விட்டார்.
வெளியே சென்ற விமானி மீண்டும் விமானி அறைக்குள் வர முயன்றபோது, அதன் கதவு பூட்டிக்கொண்டது. முறைகேடாக யாரும் உள்ளே வர கூடாது மற்றும் பாதுகாப்புக்காக என்ற அடிப்படையில், அந்த கதவு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால், விமானத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.
விமானத்தின் கேப்டன், கதவை திறக்க பலமுறை முயன்றுள்ளார். அவசரகால குறியீட்டு முறையை பயன்படுத்தியும் கதவை திறக்க முடியவில்லை. அப்போது, விமான ஊழியர் ஒருவர், துணை விமானியை தொலைபேசி வழியே தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், சுயநினைவின்றி இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், துணை விமானிக்கு லேசாக சுயநினைவு வந்தது. அவர் மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்து விட்டுள்ளார். உடனடியாக உள்ளே வந்த கேப்டன் விமான கட்டுப்பாட்டை தன்வசத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து மாட்ரிட் நகருக்கு திருப்பி விடப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
துணை விமானிக்கு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், நடுவானில் 10 நிமிடங்கள் வரை மனிதர்களின் கட்டுப்பாடின்றி விமானம் பறந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இந்த பதற்றம் நிறைந்த சூழலில், விமானம் ஆட்டோபைலட் எனப்படும் முறையில் இயங்கியுள்ளது. இதனால், விமானம் சீராக பறந்துள்ளது.
மே 19, 2025
ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் தொடர்பான வீடியோவை வெளியிட்டு, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலூச் படை சவால் விட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்து மோதல் போக்கு காணப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தானை பிரித்து தரும்படியும், பாகிஸ்தானின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பலூச் விடுதலை படை (பி.எல்.ஏ.)செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 11-ந்தேதி ரெயில்வே தண்டவாளங்களை வெடிக்க செய்தும், துப்பாக்கி முனையிலும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பி.எல்.ஏ. கடத்தி சென்றது. அந்த ரெயிலில் 450 பயணிகள் இருந்தனர். எனினும், அவர்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 100-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக சிறை பிடித்து வைக்கப்பட்டனர்.
200 பாகிஸ்தான் அதிகாரிகளை, 2 நாட்களாக பணய கைதிகளாக வைத்திருப்பதற்கு முன், தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அதனை தகர்த்து, ரெயிலை கடத்திய விவரங்களை வீடியோ காட்டுகிறது.
மே 28, 2025
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் இன்று காலை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களில் அந்த விண்கலம் இலக்கை எட்டுவதற்கு பதிலாக வெடித்து சிதறியது.
இதுபற்றி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், 403 அடி (123 மீட்டர்) உயரம் கொண்ட அந்த விண்கலம், கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு, கடந்த 2 முறை தோல்வியடைந்த புள்ளியை கடந்து சென்றது. எனினும், அது வெடித்து சிதறியுள்ளது.
இன்றைய முயற்சியில் புறப்பட்ட 30-வது நிமிடத்தில், நடுவானில் பறந்து செல்லும்போது, கதவுகள் திறப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்துள்ளது. எனினும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த விண்கலம் இந்திய பெருங்கடலில் விழுந்தது. இதுபற்றிய அரிய காட்சிகள் கொண்ட வீடியோ வெளிவந்து உள்ளது. கடலில், எரிந்தபடியே விழுந்த விண்கலத்தின் பாகங்களை கரையில் நின்றபடி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஜூன் 26, 2025
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் கூட உயிரை விட உணவுதான் முக்கியம் என சிறுவன் செயல்பட்ட வீடியோ வைரலானது.
சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
அப்போது, வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இந்நிலையில், வீடு ஒன்றில் நிலநடுக்கத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், தந்தை மற்றும் அவருடைய 2 மகன்கள் டைனிங் ஹாலில் அமர்ந்து உணவு சாப்பிட்டபடி இருந்தனர். அப்போது, திடீரென வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. நிலநடுக்கமும் உணரப்பட்டது.
இதனை கவனித்த சிறுவர்களின் தந்தை, சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு, எழுந்து இளைய மகனை கையில் பிடித்தபடி அந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினார். மற்றொரு மகனையும் கூட வரும்படி சத்தம் போட்டார். அந்த சிறுவனும் அவர்களை பின்தொடர்ந்து ஓடினான். ஆனால், அந்த சிறுவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.
திரும்பி வந்து மேஜையில் இருந்த உணவை வேகவேகமாக எடுத்து வாயில் திணித்துள்ளான். இதன்பின்னர், மேஜையின் மீதிருந்த சுழலும் பலகையை சுழற்றி விட்டு, மறுபுறத்தில் இருந்த உணவையும் எடுத்து சாப்பிட்டு விட்டு ஓடினான். திரும்பவும் வந்து மீதமிருந்த அவனுக்கு பிடித்த உணவை எடுத்து சாப்பிட்டான்.
பின்னர், வீட்டினருக்கு தேவையான உணவை பாத்திரத்தில் எடுத்து கொண்டு மீண்டும் ஓடினான். வாழ்வா, சாவா நிலையில் சிறுவன் இதுபோன்று நடந்து கொண்ட வீடியோ வைரலானதும் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜூன் 8, 2025
இயற்கையில் சில அற்புதங்களும் நடக்கும் என வெளிப்படும் வகையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில், மான் கூட்டம் ஒன்று காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்த மான் குட்டி ஒன்று பிரிந்து தனியாக சென்றபோது, குளத்திற்குள் விழுந்து விட்டது.
வெளியே எப்படி வருவது என அதற்கு தெரியாமல் தவித்து கொண்டிருந்தது. அப்போது, இதனை கவனித்த யானை ஒன்று, மெதுவாக சென்று தும்பிக்கையை கொண்டு, மான் குட்டியை வெளியேற்றி விட பல்வேறு முறை முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அதனால் வெளியே வர முடியவில்லை. இறுதியாக அதனை தூக்கி விட்டு, கரை சேர்த்தது.
ஜூலை 17, 2025
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர்.
அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும். இந்தநிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் கடந்த 14-ந்தேதி 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.
இதனையடுத்து இந்திய நேரப்படி பிற்பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுபான்ஷு சுக்லா, 18 நாட்களுக்கு பின்பு மனைவி காம்னா சுக்லா, மகன் கியாஷ் சுக்லா (வயது 6) ஆகியோரை இன்று நேரில் சந்தித்து ஆரத்தழுவி கொண்டார்.
சுபான்ஷு சுக்லாவுக்கு பிடித்த, சுவையான சில உணவு பண்டங்களை தயாரித்து வைத்திருக்கிறேன் என்று காம்னா கூறியுள்ளார்.
ஜூலை 31, 2025
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லுத்தன் விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ நகர் நோக்கி தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, அதில் பயணம் செய்த இந்தியரான அபய் தேவ்தாஸ் நாயக் (வயது 41) என்பவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.
அவர், பயணிகள் நடந்து செல்லும் வழியில் நின்றபடி, அமெரிக்கா ஒழிக, டிரம்ப் ஒழிக என்று கத்தி கூச்சலிட்டார். அல்லாஹூ அக்பர் என்றும் அவர் கோஷமிட்டார். வெடிகுண்டை வெடிக்க செய்ய போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அவர் எதற்காக, விமானத்தில் கோஷமிட்டார் என்பதற்கான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆகஸ்டு 19, 2025
ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பலதரப்பு சந்திப்பு ஒன்றை இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடத்தினார். இதில் பங்கேற்பதற்காக இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அமெரிக்காவுக்கு சென்றார்.
அப்போது அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிரம்பின் உதவியாளரான அமெரிக்காவின் மோனிகா கிரவுலி வரவேற்றார். அதற்கு பதிலுக்கு மெலோனி, இந்திய முறையில் கரங்களை கூப்பி நமஸ்தே என வணக்கம் தெரிவித்து கொண்டார். இதுபற்றிய வீடியோ வைரலானது.
செப்டம்பர் 7, 2025
விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அதிலும், விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி, இங்கிலாந்து நாட்டின் ஆற்றில், இந்தியாவை சேர்ந்த பக்தர்கள், பாரம்பரிய உடையணிந்து படகு ஒன்றில் சென்று விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தனர்.
அப்போது, விநாயகரை வரவேற்கும் வகையில் அன்னப்பறவைகள் அந்த ஆற்றின் மேற்பரப்பில் நீந்தியபடி படகை நோக்கி வந்தன. வெண் நிறத்தில் அழகாக அவை நீந்தி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
செப்டம்பர் 20, 2025
முதலைக்கு முத்தமிட்டு, மசாஜ் செய்து விட்ட இளைஞரின் வீடியோ வைரலானது. முதலையின் வாய் பகுதியில் முத்தமிடும், ஆபத்து நிறைந்த செயலை அவர் அச்சமின்றி செய்த காட்சிகள் திகிலூட்டுகின்றன.
அக்டோபர் 1, 2025
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இதனால் நகரில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. அதேபோல் செபு மாகாணம் டான்பன்டயன் நகரில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயமும் நிலநடுக்க பாதிப்புக்கு இலக்கானது.
வண்ண விளக்குகளால் ஆலயம் நன்றாக அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டதும் அது பலத்த சேதமடைந்தது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.
அக்டோபர் 12, 2025
வாத்து குடும்பத்திற்காக வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்ற காட்சி வீடியோவாக வைரலானது. அதே இடத்தில் தொடர்ந்து 2-வது நாளாக வாத்து குஞ்சுகள் சாலையை கடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றிய வீடியோவை மேற்கு ஆஸ்திரேலியாவின் வாகன போக்குவரத்து கழகம் அதனுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்டது. அதுதொடர்பான செய்தியில், வாகன ஓட்டிகள் மிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
வாத்துகள், வாத்து குஞ்சுகள் அல்லது வனவாழ் விலங்குகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டால், நீங்கள் காரிலேயே இருங்கள். உதவிக்கு தொலைபேசி வழியே அழையுங்கள் என தெரிவித்து உள்ளது.
அக்டோபர் 30, 2025
சர்வதேச நீர்வழிகளில் ஒன்றான கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதை பொருட்களை ஏற்றி சென்ற படகு ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. இதனை பென்டகள் ராணுவ தலைமையகத்தின் தலைவர் பீட் ஹெக்சேத் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
போதை பொருட்களை ஒழிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முயற்சியின் ஒரு பகுதியாக நடந்த இந்த நடவடிக்கையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 62 பேர் மரணமடைந்து உள்ளனர்.
நவம்பர் 3, 2025
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வருகிற ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இயற்கையும் சவால் விட்டு வருகிறது. அந்நாட்டின் வடக்கே அமைந்த சமங்கன் என்ற மலைப்பாங்கான மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.23 லட்சம் பேர் வசிக்க கூடிய மஜார்-இ-ஷெரீப் என்ற நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அதிகாலையில் மக்கள் உறங்கி கொண்டிருந்த, இருள் சூழ்ந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் தப்பி செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதனால், 10 பேர் பலியாகி உள்ளனர். 260 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நவம்பர் 15, 2025
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் கிறிஸ்து பிறப்புக்கு பின்னர் 536-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. இந்த கோவிலின் துணை கட்டிடம் ஒன்று பக்கத்தில் அமைந்துள்ளது.
அந்த கட்டிடத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வதுண்டு. 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலின் துணை கட்டிடங்களில் ஒன்றாக இந்த கோவில் வேறொரு பழமையான கட்டிடத்தின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், அப்படி வந்த சுற்றுலாவாசிகளில் ஒருவர் மெழுகுவர்த்தியையும், நறுமணம் தரும் பத்தியையும் ஏற்றும்போது தவறாக கையாண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ மளமளவென பரவியது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.
நவம்பர் 27, 2025
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்த கடற்கரை பகுதிகளில் ஐரோப்பிய பச்சை நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அதனால், நண்டுகளை கட்டுப்படுத்த அந்த பகுதி மக்கள் சிலர் பொறிகளை அமைத்து, அவற்றை பிடித்து, அழிக்க முடிவு செய்தனர்.
ஆனால், அந்த பொறிகள் அடிக்கடி சேதமடைந்து காணப்பட்டன. இதற்காக, நியூயார்க் கல்லூரியின் உதவி பேராசிரியர் கைலே ஆர்டெல்லே தலைமையிலான ஆய்வாளர்கள் கேமராக்களை அமைத்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதில் முதன்முறையாக, மனிதர்கள் அமைத்த பொறியில் சிக்கிய நண்டை, ஓநாய் ஒன்று தன்னுடைய இரையாக மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
எனினும், பொறி இருக்கிறது என்பதும், அதில் நண்டு உள்ளது என்றும் ஓநாய்களுக்கு எப்படி தெரிய வந்தது? என ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது. அதனை நீருக்குள் இருந்து எப்படி வெளியே இழுத்து கொண்டு வர வேண்டும்? என ஓநாய்களுக்கு தெரிந்திருப்பதும் அவர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளது. இதற்கான பதிலுக்காக ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது.