ப்ளாஷ்பேக் 2025: மகிழ்ச்சி.. சோகம்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கலவையாய் அமைந்த ஆண்டு
இந்த ஆண்டில் (2025) இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கோப்பைகளை வென்று அசத்தியது.;
முன்னுரை,
2025ம் ஆண்டு முடிவடையும் வேளையில் இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்ட வெற்றி, தோல்விகள் முதல் படைக்கப்பட்ட சாதனைகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு வரை இங்கு பார்க்கலாம்.
ஆண்கள் கிரிக்கெட்:
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தோல்வி:
இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் (2024 நவம்பர் 22 முதல் 2025 ஜனவரி 7-ம் தேதி வரை) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை அற்புதமாக தொடங்கியது. ஆனால் முடிவில் இந்திய அணி 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. மேலும் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.
பாதியிலேயே ஓய்வு அறிவித்த அஸ்வின்:
இந்த தொடரின் பாதியிலேயே முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
சென்னையை சேர்ந்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரிய அவர் ஒட்டுமொத்தத்தில் 7-வது இடத்தில் உள்ளார். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து தொடர்:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 22-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை) இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி இந்த ஆண்டை வெற்றியோடு தொடங்கியது.
12 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்திய இந்தியா:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
டெஸ்டில் முடிவுக்கு வந்த ‘ரோ-கோ’ சகாப்தம்:
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வி எதிரொலியாக முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதிலும் ரோகித் சர்மா அந்த சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உருவெடுத்த சுப்மன் கில்:
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
முதல் தொடரிலேயே சாதித்த சுப்மன் கில்:
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லின் முதல் பயணம் இங்கிலாந்தில் ஆரம்பித்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பின் விளையாடிய முதல் தொடரிலேயே இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக தொடரை சமன் செய்தது பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
இந்த தொடரில் கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய சுப்மன் கில் மொத்தம் 754 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக ஜொலித்தார்.
ஆசிய கோப்பையில் அசத்திய இந்தியா:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டியில் அசத்திய திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும், அபிஷேக் சர்மா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கை குலுக்க மறுத்த சர்ச்சை:
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அப்பாவி இந்தியர்களை சுட்டுக்கொன்ற கொடூர சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகள் இடையே சண்டை ஏற்பட்டது. இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்தது.
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய வீரர்கள், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர். இது சர்ச்சையானது. இதே போல் ‘டாஸ்’ நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவுடன் கைகுலுக்குவதையும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தவிர்த்தார். அத்துடன் சில மோதல் சம்பவங்களையும் களத்தில் பார்க்க முடிந்தது.
கோப்பை இல்லா குதூகலம்:
இதன் உச்சக்கட்டமாக இந்திய வீரர்கள் வெற்றிக்கோப்பை மற்றும் சாம்பியனுக்கான பதக்கங்களை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் வாங்க மறுத்தனர். அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் கலீத் அல் ஜரூனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம் என கூறினர்.
ஆனால் இந்திய வீரர்களின் கோரிக்கையை மொசின் நக்வி ஏற்க மறுத்து விட்டார். நான்தான் வழங்குவேன் என்று அடம் பிடித்தார். இதனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் 2-வது இடத்துக்கான பதக்கம் மற்றும் பரிசை பெற்றுக் கொண்டனர். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா பரிசுத்தொகைக்கான காசோலையை அங்கேயே தூக்கி எறிந்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். பின்னர் உடனடியாக அந்த இடத்தை விட்டு பாகிஸ்தான் வீரர்கள் கிளம்பினர். இந்த சலசலப்புக்கு மத்தியில் மொசின் நக்வி, ஆசிய கோப்பையை தன்னுடன் எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து இந்திய வீரர்கள், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு அதிகாலை 1.30 மணி அளவில் வந்தனர். கோப்பையின்றி வெறுங்கையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். கோப்பை இல்லாவிட்டாலும் உற்சாகம் குறையவில்லை. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய போது, அப்போதைய கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொண்டு வந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமாரும், வீரர்களும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தொடரை வென்ற சாம்பியன் அணி கோப்பை இல்லாமல் வெறுங்கையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.
வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் ஆக்கிய இந்தியா:
ஆசிய கோப்பை முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் ஆக்கியது.
ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கம்:
இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய பிசிசிஐ, சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது.
இந்திய ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் இந்திய அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக பி.சி.சி.ஐ. நியமித்ததாக கூறப்பட்டது.
இருப்பினும் கடந்த ஓராண்டிற்குள் இரண்டு ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றிய ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவரை புதிய கேப்டனாக கில்லை நியமித்ததற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்து வருகிறது.
தோல்வியுடன் தொடங்கிய சுப்மன் கில்லின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பயணம்:
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லின் பயணம் ஆஸ்திரேலியாவில் ஆரம்பமானது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. ஆனால் அந்த தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் சுப்மன் கில்லின் கேப்டன் பயணம் தோல்வியுடன் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய இளம் படை:
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய டி20 அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணி வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதித்தது. அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருது வென்றார்.
சொந்த மண்ணில் மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதில் சுப்மன் கில் காயத்தால் விலகிய நிலையில் 2-வது போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார். அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது மோசமான தோல்வியை இந்தியா பதிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் மேலும் ஒரு பேரிடி விழுந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆகியது. இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ஒருநாள் தொடரில் அசத்திய ‘ரோ - கோ’:
டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. சுப்மன் கில் காயத்தால் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் கவணித்தார். அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அசத்தினர். குறிப்பாக விராட் கோலி 2 சதங்கள் விளாசி அசத்தினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்தியா:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரை இந்திய அணி 3-1 (4-வது போட்டி ரத்து) என்ற கணக்கில் கைப்பற்றியது. தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். இதன் மூலம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நடப்பாண்டை (2025) வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந் தேதி மும்பையில் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை பிப்.12-ந் தேதி டெல்லியில் சந்திக்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை பிப்.15-ந் தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் பிப்.18-ந் தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.
இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கேப்டன் சூர்யகுமார், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணியை இறுதி செய்தனர்.
சூர்யகுமார் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய டி20 அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுள்ள நிலையில் பேக்கப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். அத்துடன் ரிங்கு சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தி வரலாறு படைத்தது.
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் (2005 மற்றும் 2017) தோற்றிருந்த இந்திய அணி இந்த முறை அந்த ஏக்கத்தை தணித்து ரசிகர்களுக்கு தித்திப்பான பரிசை அளித்தது.
இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.