சிம்மம்: புத்தாண்டு ராசிபலன் 2026: குருவின் லாப ஸ்தான நிலையால் ஏற்படப்போகும் நன்மைகள்..!


சிம்மம்: புத்தாண்டு ராசிபலன் 2026: குருவின் லாப ஸ்தான நிலையால் ஏற்படப்போகும் நன்மைகள்..!
x

தொடர்ந்த முயற்சிகள் தான் படிப்படியாக உங்களை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும்.

சிம்மம்


சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு இறையருளால் விரும்பிய விஷயங்கள் நடந்தேறும். குருவின் ராசியான 5-ம் இடத்தில் உள்ள ராசியதிபதி, சுபர்கள் சேர்க்கை மற்றும் குரு பார்வை பெற்றுள்ளதால் தெய்வ அருள் மற்றும் அதிர்ஷ்டம் மூலமாக எண்ணிய விஷயங்கள் ஈடேறும். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனியின் காரணமாக தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்பட்டாலும் குருவின் சஞ்சாரம் அவற்றை மட்டுப்படுத்தும்.

இதுவரை திருமண விஷயங்களில் தடை தாமதங்களை சந்தித்தவர்கள் நல்ல செய்தியை பெறுவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்த எண்ணம் நிறைவேறும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்கள் போட்டிகளை நேரடியாக எதிர் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரமாக உங்கள் கருத்துக்களை சொல்லி விடக்கூடாது. பண விஷயங்களில் மற்றவர்களை நம்பிவிட வேண்டாம்.

குடும்பம், நிதிநிலை

கணவன் மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் ஆகியவை ஏற்பட்டு விலகும். கோபப்பட்டு எதுவும் பேசி விட வேண்டாம். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய ஆண்டு இது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குருவின் லாப ஸ்தான நிலை காரணமாக கடன்கள் வசூலாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இருந்தாலும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது இயலாது. வீடு மனை நிலம் ஆகியவற்றை திட்டமிட்டு வாங்கலாம். ஆவணங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேட்டவுடன் கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தொழில், உத்தியோகம்

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பல மன உளைச்சல் ஏற்படும். தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவற்றில் உள்ள சிக்கல்களை சீர் செய்ய வேண்டிய ஆண்டு இது. மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், கம்ப்யூட்டர் உபகரணங்கள் உற்பத்தி பிரிவினருக்கு இது அதிர்ஷ்டமான காலகட்டம்.

உத்தியோகஸ்தர்கள் உள்ள வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். அதே வேலையிலேயே வருடத்தின் இறுதியில் பல நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. சிலருக்கு பணியிட மாற்றம் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பொறுமைக்கு ஏற்ற பலன் தரும் ஆண்டு இது.

கலை, கல்வி

இசைத்துறையினர் புகழ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரவும். சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் உள்ளிட்ட கலைத்துறையினருக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க தாமதம் ஏற்படும். எந்த விஷயத்தையும் அவசரப்படாமல் அணுக வேண்டும். இந்த ஆண்டு கலைத்துறையினரை பொறுத்தவரை தொடர்ந்த முயற்சிகள் தான் படிப்படியாக உங்களை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும்.

மாணவர்களை பொறுத்தவரை சட்டம் மற்றும் நிதி, ஆராய்ச்சி படிப்புகள் மிகவும் சாதகமாக இருக்கும். கட்டிடக்கலைத் துறை மற்றும் மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் வெளிநாட்டு பணி வாய்ப்புகளை பெறுவார்கள். தேர்வுகளுக்காக அதிகப்படியான மன உளைச்சல் அடைய வேண்டிய அவசியம் இல்லை. திட்டமிட்டு படித்தால் சிம்ம ராசி மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

நன்மைகள் நாடி வர..

உடல் நிலையை பொறுத்தவரை நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல நிவாரணம் ஏற்படும். மலச்சிக்கல், பைல்ஸ், மூட்டு வலி, செரிமான பிரச்சினை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைகள் விலகும். மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் உங்கள் உடல் மற்றும் மனதிற்கு அமைதி கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், குரங்குகள் அல்லது நாய்களுக்கு உண்பதற்கு தீனிகள் வழங்குவதும் நன்மைகளை ஏற்படுத்தும். மாற்றுத் திறனாளிகள், துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்குவதும் நல்லது. முடிந்தால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுக்கு தங்கத்தால் ஆன சிறிய பரிசுகளை வழங்குவது நன்மைகளைத் தரும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

1 More update

Next Story