அஜித் சொன்ன அறிவுரை - 'அமரன்' இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
நடிகர் அஜித் சொன்ன அறிவுரையை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார்.
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளநிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது, நடிகர் அஜித் சொன்ன அறிவுரையை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,
'இரண்டு வருடங்களுக்கு முன்பு தீபாவளி அன்று 'பிரின்ஸ்' படம் வெளியானது. அப்படம் எதிர்பார்த்த அளவில் விமர்சனங்களையோ வசூலையோ பெறவில்லை. அப்போது சிலர் என் சினிமா வாழக்கை முடிந்துவிட்டதென்று சொன்னார்கள். அன்று இரவு, என் நண்பர் ஒருவர் அழைப்பில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு அஜித் சாரும் வந்திருந்தார்.
அவர் என்னை பார்த்து பெரிய லீக்கிற்கு வரவேற்கிறேன் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அவர் சிலர் நம் தோல்வியை பார்த்து சந்தோஷப்படுவார்கள். அதே சிலர் நாம் வெற்றிபெற்றுவிட்டால் வருத்தப்படுவார்கள். அப்படித்தான் இப்போது உங்களுக்கும் நடக்கிறது. இதற்கு நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஆழமாக பதிந்தது' என்றார்.