

தமிழ் திரையுலகில் பல விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, வித்தியாசமான படைப்புகளை வழங்கும் இயக்குநர் நாஞ்சில், தனது புதிய திரைப்படமான ‘கா’ மூலம் மீண்டும் திரையரங்குகளில் தனி அடையாளத்தை உருவாக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக, ஆக்சன் நிறைந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார். கா என்றால் காடு , கானகம் என்று பொருள். படத்தில் பாடல்கள் இருக்காது என்றும், படம் முழுவதும் ஆண்ட்ரியா ஒரே ஒரு உடையில் மட்டுமே காணப்படுவார் என்றும் இயக்குனர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தப் படம் அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் ஜார்க்கண்டில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. எனினும் சில காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.