''சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்'' படம் எப்படி இருக்கிறது..? - சினிமா விமர்சனம்


Chennai Files: Muthal Pakkam Movie Review
x
தினத்தந்தி 3 Aug 2025 1:45 PM IST (Updated: 3 Aug 2025 1:45 PM IST)
t-max-icont-min-icon

திரில்லர் கதைக்களத்தில், சமூக கருத்துகளையும் புகுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார், இயக்குனர் அனிஷ் அஷ்ரப்.

சென்னை,

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான வெற்றி, பத்திரிகை ஒன்றில் தனது தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னை வருகிறார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமைய்யாவுடன் நட்பு கிடைக்கிறது.

வெற்றியின் துப்பறியும் திறனை கண்டு வியக்கும் தம்பி ராமைய்யா, அவரை தனக்கு உதவியாக வைத்துக்கொள்கிறார். அப்போது சிலர் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.

இதையடுத்து குற்றவாளியை பிடிக்க தம்பி ராமைய்யாவும், வெற்றியும் களமிறங்குகிறார்கள்.

கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? கொலைகளுக்கான பின்னணி என்ன? வெற்றியும் துப்பறியும் திறமை பலித்ததா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் அசத்தியுள்ளார் வெற்றி. ஹீரோயிசம் காட்டாத இயல்பான நடிப்புக்கு பாராட்டலாம். ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியுள்ளார். அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

தம்பி ராமய்யா நடிப்பு 'ஒரே பாணி'யாக தெரிந்தாலும், எமோஷனல் காட்சிகளில் கலங்கடிக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டும் மகேஷ்தாஸ் பேசவே யோசிக்கிறார். சம்பளம் கம்மியோ... ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை தேவையில்லாத ஆணி. அரவிந்தின் ஒளிப்பதிவும், ஏ.ஜே.ஆர். இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை படத்துக்கு பலம். 'லாஜிக்' மீறல்கள் பலவீனம். காவல்துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர், வழக்கு விசாரணையில் இந்தளவு தலையிட முடியுமா? தெரிந்தே விதிகளை மீறியுள்ளார்களா?

திரில்லர் கதைக்களத்தில், சமூக கருத்துகளையும் புகுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார், இயக்குனர் அனிஷ் அஷ்ரப்.



1 More update

Next Story