'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்த கவுதம் வாசுதேவ் மேனன்

படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்புகிறேன் என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்த கவுதம் வாசுதேவ் மேனன்
Published on

சென்னை,

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ள இந்த படத்தில், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தொடர்ந்து தள்ளிப்போனது. கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய நாளில் படம் ரிலீஸ் தள்ளிப்போவதாக இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு தேதி குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், படம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கவுதம் மேனன், “நிதிச் சிக்கல்கள் காரணமாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தாமதமானது. அந்த பிரச்னைகளை சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியும் என நம்புகிறேன். இப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காகவே, இந்த காலகட்டத்தில் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகள் கழித்து வெளியான ‘மதகஜராஜா’ படம் மாபெரும் வெற்றியடைந்ததைப் போல, ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com