

நெல்லை,
நெல்லையில் நடைபெறும் பொருநை புத்தக திருவிழாவில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூகத்தில் நிலவும் சிக்கல்களை ஒரே பார்வையில் பார்க்காமல், பல்வேறு கோணங்களில் புரிந்து கொள்ள புத்தக வாசிப்பு அவசியம். எனக்குள் இருந்த பயத்தைப் போக்கி, என் கதைகளை உலகிற்கு சொல்லும் மொழியையும், துணிச்சலையும், ஆற்றலையும் தந்தது புத்தக வாசிப்புதான். நான் எடுத்துள்ள 5 திரைப்படங்களுமே வெறும் பொழுதுபோக்கு அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு சமூக பிரசாரம்தான்.
இன்றைய தமிழ் சமூக வாழ்வியலுக்குள் இருக்கும் முரண்பாடுகளைப் பேசுவதே என் நோக்கம். எதெல்லாம் சரி, எதெல்லாம் தவறு, எவற்றை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நோக்கி தான் என் படங்கள் மக்களைப் பேசத் தூண்டுகின்றன. என் கலை வடிவம் வழியாக நான் எப்போதும் சமூக நீதிக்காகவும், மாற்றத்திற்காகவும் பிரசாரம் செய்துகொண்டே இருப்பேன்.
நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. கலைதான் என் தளம். அந்த தளத்தில் நின்றுகொண்டு நான் நம்பக்கூடிய சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவத்திற்காக கடுமையாக இயங்குவேன். என் திரைப்படங்களே அந்த போராட்டத்தின் ஒரு பகுதிதான். வாசிப்பு என்பது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.