"படை தலைவன்" முதல்காட்சியில் அப்பாவை பார்த்தபோது அழுதுவிட்டேன் - சண்முக பாண்டியன்

அன்பு இயக்கியுள்ள ‘படை தலைவன்’ படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக 'சகாப்தம்' என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் 'மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்துள்ளார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சண்முக பாண்டியன் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. "இப்படத்தின் முதல்காட்சியில் அப்பாவைப் பார்க்கும்போதே நான் அழுதுவிட்டேன். அப்பா எங்களுடன் இல்லாதது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் மேல் இருந்து எங்களுக்கு ஆசிர்வாதத்தைத் தருகிறார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவுடைய பாடலை எல்லோரும் யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல 'நீ பொட்டு வெச்ச' பாடலை 'லப்பர் பந்து' படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் நாங்கள் வைத்துவிட்டோம். நிறையப் பிரச்னைகளால் படம் தள்ளிப்போனதால் எங்களுடையது முதலில் வரவில்லை.
இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கு முன்பு அப்பாவிடம் கேட்டோம். அப்பா சரி என்று சொன்னப்பிறகு தான் அந்தப் பாடலை இந்தப் படத்தில் வைத்தோம். அம்மாவுக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. எமோஷனல் ஆகிவிட்டார்கள். அம்மாவுக்கு நான் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடன் இருக்கவேண்டிய நிலை இருந்தது. அதனால் என்னால் நடிக்க முடியவில்லை. ரொம்ப வருடங்கள் கழித்து என்னைத் திரையில் பார்த்ததால் அழுதுவிட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.






