

2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'. இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதில் ஈஸ்வர் என்றவருடன் இணைந்து இசையமைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் கென் கருணாஸ். தற்போது அவர் புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘யூத்’ என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தேவதர்சினி, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில், சிறை படம் மூலம் கவனிக்கப்பட்ட அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இது தொடர்பான புரோமோ வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கென் கருணாஸ் இயக்கிய ‘யூத்’ படத்தின் டீசர் வெளியானது. இப்படம் பிப்ரவரியில் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘யூத்’ படத்தை மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.