தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Published on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ம் தேதி நடைபெறும் எனவும், ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கவுன்சில் சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தலை நடத்த ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரி தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களான சீனிவாசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்த போது, சங்கத்தின் சட்ட விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை மறுத்து, தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில், சட்ட விதிகளை பின்பற்றியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களில் மனுதாரர்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது எந்த எதிர்ப்பும் அவர்கள் தெரிவிக்காத நிலையில், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களில் நான்கு பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலை நடத்தியவர் என்ற முறையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடும்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு தடை கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், கடந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடைமுறை துவங்கியுள்ள நிலையில், மற்றொரு தேர்தல் அதிகாரியை நியமிப்பது முறையாகாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com