''எனது குடும்பமும் ஒரு காலத்தில்...'' - உணர்ச்சிவசப்பட்ட ராகவா லாரன்ஸ்

மகளின் கல்விக்காக தனது மனைவியின் (மறைந்த) தாலியை அடகு வைத்த தந்தையை கண்டு ராகவா லாரன்ஸ் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.
சென்னை,
பல ஆண்டுகளாக, சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல் மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி வருகிறார். சமீபத்தில், ஒரு ஏழை மாணவியின் கஷ்டங்களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.
மகளின் கல்விக்காக தனது மனைவியின் (மறைந்த) தாலியை அடகு வைத்த ஒரு தந்தையை நினைத்து உணர்ச்சிவசப்பட்டதாக ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள பதிவில், ''அனைவருக்கும் வணக்கம்! மகளின் படிப்புச் செலவுக்காக தனது மறைந்த மனைவியின் தாலியை அடகு வைத்த ஒரு தந்தையைப் பற்றி அறிந்தேன்.
அது என் மனதை மிகவும் தொட்டது, ஏனென்றால் எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது. மாற்றம் (அறக்கட்டளை )மூலம், தாலியை மீட்டு அவரிடம் திருப்பித் தர முடிந்தது. அது வெறும் தங்கம் மட்டுமல்ல, அவரது அன்பு மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு. இன்று என் இதயம் உண்மையிலேயே நிறைந்துள்ளது'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.






