நயன்தாராவின் ஆவணப் படத்துக்கு மீண்டும் சிக்கல்!


நயன்தாராவின் ஆவணப் படத்துக்கு மீண்டும் சிக்கல்!
x
தினத்தந்தி 10 Sept 2025 12:31 PM IST (Updated: 10 Sept 2025 5:56 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் நயன்தாரா; பியாண்ட் தி பேரி டேல்'(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் டார்க் ஸ்டூடியோ தயாரிப்பில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் நானும் ரவுடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இது தொடர்பாக தனுஷின் வுண்டர்பார்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்தத் தடை கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் சந்திரமுகி காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், மேலும் அதன்மூலம் கிடைத்த லாபத்திலிருந்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story