

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். மேலும், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு, ‘சேயோன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளது.
வெளியான இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் மிரட்டலான, வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார். இதனால், இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பிறந்தநாளில் வெளியான இந்த ஸ்பெஷல் வீடியோ ரசிகர்களின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.