நடிகை பிரத்யுஷா சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

நடிகை பிரத்யுஷா சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

நடிகை பிரத்யுஷா சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Published on

ஐதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை பிரதியுஷா. கடந்த 1999ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கிய மனுநீதி படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரதியுஷா. பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல்பூக்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால், இவர்களது காதலுக்கு சித்தார்த்தின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2002ம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். இதில், சித்தார்த் உயிர் தப்பிய நிலையில், பிரதியுஷா உயிரிழந்தார்.

தற்கொலைக்கு தூண்டியதாக சித்தார்த்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் டிசம்பர் 2011-ஆம் ஆண்டில் ஆந்திரா ஐகோர்ட் 2 ஆண்டுகளாக தண்டனையை குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.

இதனால் பிரதியுஷாவின் தாயார், கடந்த 2012 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவர் தொடுத்த வழக்கில், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது இறப்பு திட்டமிடப்பட்ட கொலை என வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் 4 வாரங்களில் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு குறைப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகை பிரதியுஷா விஷம் அருந்தியே உயிரிழந்தார் என்றும், அதற்கு தூண்டுதலாக சித்தார்த் ரெட்டி இருந்தார் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com