‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் ‘பண்டாரத்தி’ என்னும் கதாபாத்திரம் இனி ‘மஞ்சனத்தி’ என அழைக்கப்படும் - இயக்குநர் மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் ‘பண்டாரத்தி’ என்னும் கதாபாத்திரம் இனி ‘மஞ்சனத்தி’ என அழைக்கப்படும் - இயக்குநர் மாரி செல்வராஜ்
Published on

சென்னை,

பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 2வது படமான கர்ணன், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். 

தனது முதல் படத்தில் மாரி செல்வராஜ், மிகவும் நுட்பமான சமூக அரசியலை பேசியிருந்தார். விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பரியேறும் பெருமாள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவரது இரண்டாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு ஏற்றவாறு கர்ணன் படத்தின் பாடல்களும் அமைந்திருந்தன.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடல், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிப்பிடும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதால் படத்திலிருந்து அப்பாடலை நீக்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், பாடலாசிரியர், பாடலைப் பாடிய தேவா, தயாரிப்பாளர் தாணு, திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அலுவலர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், கர்ணன் திரைப்படத்தில் வரும் பண்டாரத்தி என்னும் கதாபாத்திரம் இனி மஞ்சனத்தி என அழைக்கப்படும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.

தேவதைகள் எந்தப் பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? நம் சமூக அடுக்குமுறை அமைப்பில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவும், விலக முடியாததாகவும் இருக்கிறது. 

இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தைப் பாடுவான், கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று மாரி செல்வராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com