“உயிருள்ளவரை உஷா” படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வது ஏன்? - டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் இயக்கத்தில் நளினி , கங்கா நடித்திருந்த ‘உயிருள்ள வரை உஷா’ படம் வரும் 13-ந்தேதி ரீ-ரிலீஸாகிறது.
“உயிருள்ளவரை உஷா” படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வது ஏன்? - டி.ராஜேந்தர்
Published on

சென்னை,

வெள்ளி விழா கொண்டாடிய ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் 43 ஆண்டுகளை கடந்திருக்கிறது. இந்த படத்துக்கு முன்னர் தமிழ் சினிமாவில் ரயில் பயணங்களில் உள்பட சில படங்களை இயக்கியிருந்தார் டி. ராஜேந்தர். அதுவரை தனது படங்களில் கேமியோ, கெளரவ வேடம், சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி வந்த டி. ராஜேந்தர் ஹீரோவாக படம் முழுக்க தோன்றியது ‘உயிருள்ள வரை உஷா’ படத்தில்தான்.

தனது படங்களில் இயக்கம், எழு்த்து பணிகள் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் உள்பட இதர பொறுப்புகளை ஏற்று செய்து வந்த டி. ராஜேந்தர், இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பிலும் பட்டையை கிளப்பினார். அதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான இருந்த இலக்கணங்களை உடைத்தெறியும் விதமாக தாடியுடன் கூடிய லுக்கும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடன் கூடிய நடிப்பையும் வெளிப்படுத்தி டி.ராஜேந்தர் ஸ்டைலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

‘உயிருள்ள வரை உஷா’ படம்தான் டி. ராஜேந்தர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக தயாரித்த படமாகவும் அமைந்தது. தனது காதலியின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்து டி. ராஜேந்தர் எடுத்திருந்த இந்த படத்தில் நடிகர் கங்கா, நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகங்களாக தோன்றினர். அதேபோல் பிரமாண்ட செட் அமைப்பதில் டி.ஆர்., தனித்துவமானவர் என்கிற பார்முலா தொடங்கியதும் இந்த படத்தில்தான்.

தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த படத்தில் வேறு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பதிலாக தானே ஹீரோவாக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம ரசிகர்களை கவர்ந்தார். படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைத்தார். மேகம் வந்து தாகம், இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம் போன்ற பாடல்கள் அந்த கால இளசுகளை தாளம் போட வைத்தது. பாடகர் கே.ஜே. யேசுதாஸ் குரலில் வைகை கரை காற்றே நில்லு பாடல் காலத்தால் அழியாத மெலடியாக நிலைத்து நிற்கிறது.

இந்நிலையில் 43 வருடங்களுக்கு பிறகு படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வருகிற 13-ந்தேதி முதல் திரைக்கு வருகிறது. இதையொட்டி டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“1980 கால கட்டம் காதலை சொல்வதற்கே கஷ்டப்பட்ட காலம். ஒரு பொண்ணு அருகில் போய் பேசுவதையே சரித்திரமாக நினைப்பார்கள். அந்த பொண்ணுக்கிட்ட எப்படி காதலை சொல்லலாம். காதல் கவிதை எப்படி சொல்லலாம் என்று நினைப்பது ஒரு காலகட்டம். மவுனமான காதல் ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணிற்கும் இருந்ததால் தான் ஒருதலை ராகம் படத்திற்கு பெண்களும் படையெடுத்தார்கள். படம் எடுத்தது டி. ராஜேந்தர், படையெடுத்தது பெண்கள்.

காரணம் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது காதலை சொல்ல முடியாத உணர்வை அந்த படம் பிரதிபலித்தது. நான் நிறைய படங்கள் எடுத்து பண்ணினாலும் ‘உயிருள்ள வரை உஷா’ படம் என்னை வேறொரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. எனவே அந்த லவ் ஸ்டோரியை இன்னைக்கு இருக்கிற 2கே கிட்ஸ் இளம் தலைமுறையை போய் எப்படி பிடிக்கனும் என மக்களின் மனநிலையை அறிந்து படமெடுப்பவன் நான். எனவே ‘உயிருள்ள வரை உஷா’ படத்தை மீண்டும் வெளியிடுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com