

கேரளா - தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி தீலீபன் விசாரிக்கிறார். இதற்கிடையே, லண்டனில் இருந்து தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் பூர்வீக வீட்டில் ஆனந்த் நாக் குடியேறுகிறார். அந்த சமயம் வீட்டு வாசலில் மூதாட்டி வடிவுக்கரசி மயக்கம் அடைந்து விழுகிறார். அவரை உள்ளே அழைத்து வந்து, படுக்க வைக்கிறார். அந்த மூதாட்டியை வீட்டுக்குள் இருக்கவிட வேண்டாம் என்று ஊர் தலைவர் எச்சரித்தும் ஆனந்த் நாக் அதை கேட்கவில்லை.
இதற்கிடையில் வடிவுக்கரசி பற்றிய ஒரு ரகசியம் அறிந்து கணவன் - மனைவி இருவரும் அதிர்ந்து போகிறார்கள். இதையடுத்து இருவரையும் அடித்து கட்டி போடுகிறார் வடிவுக்கரசி. அவர்களின் குழந்தைகளையும் கொலை செய்ய துடிக்கிறார். மறுபுறம் போலீஸ் அதிகாரி திலீபனும், ஊர் தலைவரான கஜராஜூம் ஆனந்த் நாக் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது என்ன நடந்தது? வடிவுக்கரசியின் பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
ஒச்சாயி மூதாட்டியாக முதிர்ச்சியான நடிப்பை காட்டி மிரட்டியுள்ளார் வடிவுக்கரசி. அவரது பார்வை பீதியடைய வைக்கிறது. வசனம் பேசாமல் பார்வையிலும், முக பாவணையிலும் மிரட்டி தான் ஒரு கைதேர்ந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரது நடிப்பிலும் குறையில்லை. ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டன், இசையமைப்பாளர் செல்லையா பாண்டியன் படத்தை தாங்கி பிடித்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கு சொல்லப்படும் மாய மந்திர கதைகளை மையமாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திகில் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய குமாரன்.