"லாக்டவுன்" சினிமா விமர்சனம்

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக்டவுன் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"லாக்டவுன்" சினிமா விமர்சனம்
Published on

சென்னை,

பட்டப்படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு, ஐ.டி.துறையில் இரவு நேர வேலைகளே அமைகிறது. இதனால் குடும்பத்தினரின் தடையை மீறி வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கிறார். இதற்கிடையில் தனது தோழியின் அழைப்பின் பேரில் ஒரு 'பார்ட்டி'க்கு செல்கிறார். அங்கே மது விருந்து, ஆட்டம், பாட்டத்தை பார்த்து மதி மயங்குகிறார். போதையில் மயங்கியும் விழுகிறார்.

'பார்ட்டி' முடிந்து சில வாரங்கள் கழித்து எதிர்பாராத ஒரு சிக்கலில் அனுபமா மாட்டிக் கொள்கிறார். அந்த சிக்கலுக்கு காரணம் அந்த 'பார்ட்டி' தான் என்று தெரியவருகிறது. பெற்றோருக்கு தெரியாமல் அந்த பிரச்சினையை தீர்க்க முயலும் அனுபமாவை சூழ்நிலை சுற்றி சுற்றி அடிக்கிறது. அனுபமா அந்த சிக்கலில் இருந்து மீண்டாரா, இல்லையா? என்பதே மீதி கதை.

சர்ச்சையான கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டலாம். பிரச்சினைகளில் சிக்கி அவர் போராடும் இடம் பதைபதைப்பு. நிச்சயம் விருது உறுதி.

பெற்றோராக நடித்திருக்கும் சார்லி - நிரோஷாவின் அனுபவ நடிப்பு அசத்தல். மகளை காப்பாற்ற துடிக்கும் இருவரது நடிப்பும் எதார்த்த உணர்வுகளால் 'பளிச்'சிடுகிறது. பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவும், என்.ஆர்.ரகுநந்தன் - சித்தார்த் விபினின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. பல இடங்களில் காட்சிகளை யூகிக்க முடிகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை திசைமாறி விட்டது. நாடகத்தனமாகவும் சில காட்சிகள் நகர்வது பலவீனம்.

எதிர்பாராத சூழலில் சிக்கி ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாள்? என்பதை காட்டியதுடன், பெற்றோரிடம் எதையும் மறைக்கக்கூடாது என்றும் அழுத்தமாக சொல்லி விழிப்புணர்வு ப(பா)டம் எடுத்துள்ளார், இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா. கிளைமேக்ஸ் திருப்பம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com