

சென்னை,
எளியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே கதை.
தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் சசிகுமாரும், சைத்ரா ஆர்ச்சரும் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள். திடீரென சைத்ரா ஆர்ச்சருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. அதிக ரத்தப்போக்கால் அவதிப்படும் அவரை குணமாக்க, சசிகுமார் போராடுகிறார். பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பிரச்சினை தீரவில்லை. வாங்கிய கடன் கழுத்தை அடைக்க ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.
இதற்கிடையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சசிகுமார்-சைத்ரா ஆர்ச்சர் இறந்துவிட்டதாக கூறி, அவர்களுக்கான நிவாரண தொகையை சிலர் அபகரித்து விடுகிறார்கள். இதையடுத்து பத்திரிகையாளர் குருசோமசுந்தரத்தை சந்தித்து நியாயம் கேட்கிறார்கள் சசிகுமார்-சைத்ரா ஆர்ச்சர் தம்பதி. இப்படி ஒரு சூழலில் மத்திய மந்திரி ஆஷா சரத்தின் சிறுநீரகம் பழுதடைய மாற்று சிறுநீரகம் தேடி, சசிகுமாரிடம் வருகிறது ஒரு கும்பல். சூழ்நிலை கைதியாகி போன சசிகுமார் எடுத்த முடிவு என்ன? சசிகுமாருக்கு நீதி கிடைத்ததா? என்பதே மீதி கதை.
வழக்கமான நடிப்பை காட்டாமல், வித்தியாசமான நடிப்பை காட்டி வியக்க வைத்துள்ளார் சசிகுமார். அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவரது போராட்டம் மனதை கணக்க செய்கிறது. எதார்த்த நடிப்பால் 'பளிச்'சிடுகிறார், சைத்ரா ஆர்ச்சர். சசிகுமாருக்கு இணையாக நடிப்பில் 'ஸ்கோர்' செய்துள்ளார்.
குரு சோமசுந்தரம், ராம்குமார் பிரசன்னா, ஆஷா சரத், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்டோரும் கதையின் ஓட்டத்துக்கேற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு எளிய மனிதர்களின் வாழ்வியலை அப்பட்டமாக காட்டியுள்ளது. ஷான் ரோல்டனின் இசை படத்துக்கு உயிரோட்டம். சாட்டையடி வசனங்களும், எதார்த்த காட்சிகளும் பலம். சில காட்சிகள் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. முதல் பாதியில் திரைக்கதையில் தொய்வும் தென்படுகிறது.
ஆஸ்பத்திரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். எளியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கத்தினரின் ஆதிக்கத்தை பட்டவர்த்தனமாக காட்டியுள்ள இயக்குனர் ராஜூ முருகன், அதிகார வர்க்கத்துக்கும் நல்ல குட்டு வைத்துள்ளார். 'ஜப்பான்' படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடித்துவிட் டார்.
மை லார்ட் -திருத்தப்பட்ட தீர்ப்பு