மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நடனக் கலைஞர்


மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நடனக் கலைஞர்
x
தினத்தந்தி 23 May 2022 5:30 AM GMT (Updated: 23 May 2022 5:30 AM GMT)

சிறந்த பாடகியாகத் திகழ்ந்த ஜோசபின் ‘பிரான்சின் தலைநகரான பாரீஸுசும், என் பிறந்த நாடும் என் மனதுக்கு பிரியமானவை’ என்று பாடி பிரெஞ்சு மக்களின் மனதைக் கவர்ந்தார். வெகுஜன கலாசாரத்தின் முக்கிய அங்கமானார்.

பிரான்சு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரம், அமெரிக்க நாட்டின் நடனக் கலைஞருக்கு வழங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கவுரவத்தைப் பெற்றவர், ஜோசபின் பேக்கர் என்ற அமெரிக்கப் பெண்.

ஜோசபின் பேக்கர் (1906-1975) அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தார். ஜோசபின் வளர்ந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு எதிரான இனவெறுப்பு அமெரிக்காவில் தலைவிரித்து ஆடியது. அந்த மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நின்ற கொடுமையை நேரில் பார்த்தார்.

தன்னுடைய பதினாறாவது வயதில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கும் குழுவில் பாடவும், நடனமாடவும் வாய்ப்பைப் பெற்று அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். 1923-ம் ஆண்டில் தனது நெடுநாள் கனவான, நியூயார்க் நகரில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

ஜோசபினின் வாழ்வில் திருப்புமுனையாக, 1925-ம் ஆண்டில் பிரான்சு நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாரீஸ் நகரில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது அவரின் செல்லப்பிராணியாக இருந்த சிறுத்தை ஒன்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிறந்த பாடகியாகத் திகழ்ந்த ஜோசபின் 'பிரான்சின் தலைநகரான பாரீஸுசும், என் பிறந்த நாடும் என் மனதுக்கு பிரியமானவை' என்று பாடி பிரெஞ்சு மக்களின் மனதைக் கவர்ந்தார். வெகுஜன கலாசாரத்தின் முக்கிய அங்கமானார்.

1937-ம் ஆண்டு பிரெஞ்சு தொழிலதிபரான ஜான் லையானைத் திருமணம் செய்துகொண்டு பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றார். 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால் அவருடைய கலை நிகழ்வுகளுக்குத் தற்காலிகத் தடை ஏற்பட்டது. பிரெஞ்சு படையில் கவுரவப் பதவி பெற்று, ஜெர்மானியர்களைப் பற்றி தகவல் சேகரித்து, நேச நாடுகளின் ராணுவத்திடம் கொண்டுசேர்க்கும் உளவுப் பணியைச் செய்தார். போர் முடிந்த பிறகு தான் ஆற்றிய சேவைகளுக்காக பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து விருதும், பதக்கமும் பெற்றார்.

1950-களில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்த ஜோசபின் அங்கு தங்குவதற்காக ஓட்டல் அறை பதிவு செய்ய முயன்ற போது நிறவெறியின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறு அமெரிக்காவில் புரையோடி இருந்த நிறவெறியை வெளிப்படையாக எதிர்த்தார். மார்ட்டின் லூதர் கிங்கின் தலைமையில் ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் உரிமைக்காக போராடிய சிவில் ரைட்ஸ் இயக்கத்தை ஆதரித்தார்.

தன் இறுதிக் காலம் வரையிலும் பாடகியாகவும், நடனக் கலைஞராகவும் நீங்காத புகழுடன் வாழ்ந்தார் ஜோசபின். 1975-ம் ஆண்டு அவர் மறைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாரீஸ் நகரில் 20 ஆயிரம் பேருக்கும் மேலே கூடினார்கள். 2021-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தேசிய வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய மரியாதையான 'பான்தீயன்' என்ற நினைவுச் சின்னத்தில் ஜோசபின் பேக்கரும் இடம்பெற வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது பிரெஞ்சு அரசாங்கம்.


Next Story