நிறுவனங்களின் வெற்றிக்கு வழிகாட்டும் மீரா


நிறுவனங்களின் வெற்றிக்கு வழிகாட்டும் மீரா
x
தினத்தந்தி 16 July 2023 1:30 AM GMT (Updated: 16 July 2023 1:30 AM GMT)

மனிதவள மேம்பாடு, ஆலோசனை, பயிற்சித்துறை, உணவுப்பொருள் தயாரிப்புத்துறை ஆகிய துறைகளில் பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். குடும்பத்தையும், தொழிலையும் சமமாக பார்க்க வேண்டிய சூழ்நிலையே இதற்கு காரணம்.

லக அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் தொடங்கி, புதிதாக உருவாகும் நிறுவனங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு முதல் சந்தைப்படுத்துவது வரை ஆலோசனை வழங்கி வருகிறார் தொழில் வல்லுனரான மீரா வெங்கட். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம் அவற்றின் வெற்றிக்கு வழிகாட்டுகிறார்.

சர்வதேசப் பல்கலைக்கழகம் ஒன்றில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள மீரா, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சர்வதேச இறக்குமதி - ஏற்றுமதி கவுன்சிலின் தலைவராக பணியாற்றுகிறார். தன்னுடைய பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும், பதவிகளையும், கவுரவங்களையும் பெற்றிருக்கிறார். பெண்கள் தொழில்முனைவோர்களாக மாறுவதை ஊக்குவித்து வரும் மீரா, அதுபற்றிய பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

தொழில் வல்லுனராக நீங்கள் செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்கள்?

உலக அளவில் பல நிறுவனங்களுக்கு நிர்வாக மேலாண்மை, வளர்ச்சிக்கான வியூகங்களை அமைப்பது, தொழிலில் சந்திக்கும் சவால்களை விவாதித்து தீர்வு காண்பது, தரக்கட்டுப்பாடு செய்வது, பிராண்டை உருவாக்குவது, சந்தைப்படுத்துவது, நிதி திரட்டுவது, முதலீடுகளைப் பெறுவது உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆலோசனை வழங்குகிறேன்.

சர்வதேச இறக்குமதி-ஏற்றுமதி கவுன்சிலின் தலைவராக எத்தகைய பணிகளை செய்கிறீர்கள்?

சர்வதேச இறக்குமதி-ஏற்றுமதி கவுன்சிலின் கர்நாடகப் பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். இந்த அமைப்புக்கு உலக அளவில் 20 நாடுகளில் அலுவலகம் உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இறக்குமதி-ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

பெருநிறுவனங்களின் செயல்பாட்டில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது?

பெருநிறுவனங்களின் செயல்பாட்டில் மேல்நிலை, நடுநிலை, அடிநிலை என்று மூன்று வகையான படிநிலைகள் உள்ளன. இதில் நடுநிலை மற்றும் அடி நிலைகளில் பெண்கள் அதிகமாக உள்ளனர். அவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. ஆனால் மேல்நிலையில், அதாவது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரி, தலைமை செயல்பாட்டு அதிகாரி போன்ற பதவிகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. தலைமைத்துவ பணிகளில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது கிடையாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. குடும்ப பொறுப்புகள், பயணம் செய்ய இயலாதது, தொழிலுக்காக அதிக நேரம் செலவிட முடியாதது போன்றவை அவற்றில் சில.

இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்களின் நிலை பற்றி உங்கள் பார்வை என்ன?

யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களால் எத்தகைய பணிகளை செய்ய முடியுமோ, அதை மட்டுமே பெண் தொழில்முனைவோர் தேர்வு செய்கிறார்கள். பயணம், அதிக உழைப்பு, அதிக தொழிலாளர்கள் போன்றவை தேவைப்படும் ஆட்டோமொபைல் துறை, உற்பத்தித் துறை, தயாரிப்புத்துறை, தொழில்நுட்பத்துறை ஆகியவற்றை பெண்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது இல்லை. இந்த துறைகளுக்கு அதிக உதவிகள் அதாவது 'சப்போர்ட் சிஸ்டம்ஸ்' தேவை. ஆனால் மனிதவள மேம்பாடு, ஆலோசனை, பயிற்சித்துறை, உணவுப்பொருள் தயாரிப்புத்துறை ஆகிய துறைகளில் பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். குடும்பத்தையும், தொழிலையும் சமமாக பார்க்க வேண்டிய சூழ்நிலையே இதற்கு காரணம்.

பெண் தொழில்முனைவோர்கள் சிறப்பாக செயல்பட உங்கள் ஆலோசனை என்ன?

ஒரு தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு அடிப்படை தேவை முதலீடுதான். பணத்தை மட்டுமே முதலீடாக எடுத்துக்கொள்ள முடியாது. நேரம், பயணம், கற்றல், மக்கள் தொடர்பு ஆகியவற்றிலும் பெண் தொழில்முனைவோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுவும் ஒருவகையான முதலீடே ஆகும். தொழிலில் சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. அதை முறையாக பயின்ற நபர்களை பணியமர்த்தி செய்து முடிக்க வேண்டும்.

பெரும்பாலான பெண்கள், அனைத்து வேலைகளையும் தாங்களே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். அது தவறு. எதில் உங்களுக்கு அதிக திறமை இருக்கிறதோ, அந்த துறையை மட்டும் உங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற பிரிவுகளுக்கான பணிகளை அதற்கென பயிற்சியும், நிபுணத்துவமும் பெற்ற பணியாளர்களிடமோ அல்லது அதற்கென இயங்கும் நிறுவனங்களிடமோ ஒப்படைத்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

தொழில் ரீதியாக பாலின வேறுபாடுகள் தொடர்பான சிரமங்களை பெண்கள் எவ்வாறு கையாளலாம்?

பாலின வேறுபாடுகள் தொடர்பான பல்வேறு சிரமங்களை தங்கள் தொழிலில் பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்கின்றனர். அவற்றை களைய தங்கள் தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் தாங்களே கற்றுக் கொள்வது தீர்வாக அமையும். அப்போதுதான் தங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை பிறருக்கு புரிய வைத்து சரியான தீர்வை காண முடியும்.

சேம்பர் ஆப் காமர்ஸ், சி.ஐ.ஐ போன்ற அமைப்புகளில் 'மகளிருக்கு அதிகாரமளித்தல்' என்ற துறையில் பெண்களுக்கான பயிற்சி திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றால், எந்தவிதமான வேறுபாடுமின்றி தங்கள் தொழிலில் பெண்களும் சிறந்து விளங்கலாம்.

சமூகத்துக்காக நீங்கள் செய்துவரும் பணிகள் பற்றி சொல்லுங்கள்?

என்னுடைய அறக்கட்டளையின் மூலம் பெண்களுக்கு, குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், பயிற்சிகளை வழங்கி வருகிறேன். அவர்களுக்கு சந்தைப்படுத்துதல் துறையிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறேன். இவை அனைத்தையும் எனது சொந்த செலவிலேயே செய்து வருகிறேன். அறக்கட்டளைக்கு மற்றவர்களிடம் இருந்து நன்கொடைகள் பெறுவது இல்லை.

உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் குறித்து சொல்லுங்கள்?

குளோபல் லீடர்ஷிப் விருது, சி.என்.பி.சி பிசினஸ் எக்சலன்ஸ் விருது, குளோபல் உமன் எக்சலன்ஸ் விருது, பி.ஆர்.ஐ அவுட்ஸ்டாண்டிங் உமன் விருது, உமன்ஸ் எகனாமிக் பாரம் விருது, சிறந்த தொழில்முனைவோருக்கான விருது, பியூச்சர் ஆப் இந்தியா விருது, அவுட்ஸ்டாண்டிங் உமன் அச்சீவர் விருது போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறேன்.


Next Story