ஆர்வமுடன் செயலாற்றினால் வெற்றி உங்கள் வசமாகும் - ஐஸ்வர்யா


ஆர்வமுடன் செயலாற்றினால் வெற்றி உங்கள் வசமாகும் - ஐஸ்வர்யா
x
தினத்தந்தி 23 April 2023 1:30 AM GMT (Updated: 23 April 2023 1:30 AM GMT)

‘உணவே மருந்து’ எனும் பாரம்பரியத்தை கொண்டவர்கள் நாம். ஆனால் தற்போது நாம் வாங்கி சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கப்படும், ரசாயனங்கள் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி, நம்மை மருத்துவ உதவியை நாடும்படி செய்து விடுகின்றன.

ல்வேறு கனவுகளோடு படித்து பட்டம் பெற்று, தனக்கு பிடித்த துறையில் சேர்ந்து பணியாற்றும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். சிலரது வாழ்வில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். திருமணத்துக்கு பின்பு குடும்ப பொறுப்புகள், குழந்தைகள் பராமரிப்பு என குறுகிய வட்டத்துக்குள்ளேயே அவர்களது வாழ்க்கை சுழல்வதால், தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்த மறந்துவிடுகிறார்கள். ஒரு சிலரே அதைத்தாண்டி தங்களுக்கான சுய அடையாளத்தை உருவாக்குகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் வேலூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா.

முதுநிலை பொறியியல் படித்து முடித்ததும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய இவர், திருமணத்துக்கு பின்பு வேலையில் இருந்து விலகி கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார். குழந்தைப்பேறுக்கு பின்பு அந்தப் பணியில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் குடும்ப பொறுப்புகள், குழந்தைகள் பராமரிப்பு என்று நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. இந்த நிலையில்தான் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக சத்துள்ள உணவுப் பொருட்களுக்கான தேடலை ஆரம்பித்தார்.

அந்தத் தேடலில் அவருக்குக் கிடைத்தது எல்லாம், ரசாயனங்கள் கலந்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மட்டுமே. அதன் விளைவாக, சத்து நிறைந்த உணவுகளை தனது குழந்தைகளுக்காக தானே தயாரிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கலப்படமில்லாத 'சத்துள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பதையே தொழிலாக செய்தால் என்ன?' என்று அவருக்குள் எழுந்த கேள்விக்கு விடையாக அமைந்ததே அவரது நிறுவனம். பல்வேறு சத்துமாவு பொருட்கள், மில்க் ஷேக் வகைகள் என்று முழுவதும் இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்களை தயாரிக்கிறார். அவரது பேட்டி.

பொறியியல் பட்டதாரியான உங்களை சத்துப் பொருட்கள் தயாரிக்க தூண்டியது எது?

'உணவே மருந்து' எனும் பாரம்பரியத்தை கொண்டவர்கள் நாம். ஆனால் தற்போது நாம் வாங்கி சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கப்படும், ரசாயனங்கள் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி, நம்மை மருத்துவ உதவியை நாடும்படி செய்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடக்கூடிய உணவுகளிலும் செயற்கை நிறங்கள், மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட், ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப், செயற்கை இனிப்பூட்டிகள், சோடியம் பென்சோயேட், டிரான்ஸ் பேட் போன்ற ரசாயனங்கள் அதிக அளவில் கலக்கப்படுகின்றன. இதனால் சிறு வயதிலேயே அவர்கள் வயிற்றுக் கோளாறுகள், புற்றுநோய், மூளைத் திறன் பாதிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். இதைத் தெரிந்துகொண்ட பிறகு, எனது குழந்தைகளுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை இயற்கையான பொருட்கள் மட்டுமே கொண்டு தயாரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம்தான் என்னை சத்துப்பொருட்கள் தயாரிக்கும்படி செய்தது.

நாளடைவில் இதையே தொழிலாக செய்து எனது அடையாளமாக மாற்ற நினைத்து, என்னுடைய நிறுவனத்தைத் தொடங்கினேன்.

உங்களுடைய தொழிலைத் தொடங்கியபோது கிடைத்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்?

தொழிலைத் தொடங்கியபோது எங்கள் நிறுவனத்துக்கான லோகோ மற்றும் இதர வடிவமைப்பு பணிகள், இயந்திரங்கள், தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் பெறுதல் என பல படிநிலைகள் இருந்தன. அவற்றை பல்வேறு சிரமங்களுக்கு இடையே முயற்சி செய்து பெற்றோம்.

ஆரம்ப காலகட்டத்தில் நானும், எனது மாமியாரும் சேர்ந்துதான் அனைத்தையும் தயார் செய்தோம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நாங்கள் தயாரித்த சத்து உணவுகளைப் பற்றி எடுத்துக்கூறி, அதை பயன்படுத்தச் சொன்னோம். அவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு, எனக்கு நம்பிக்கையை அளித்தது. பின்னர் படிப்படியாக பாலில் கலந்து குடிக்கும் வகையிலான பல்வேறு சத்துமாவு கலவைகளை தயார் செய்தோம். இப்போது மில்க் ஷேக் வகைகளையும் தயாரிக்கிறோம்.

பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே எங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துகிறோம். அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களிடமும் அவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் மக்கள் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை கொள்வதால், இதுபோன்ற உணவுகள் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

தொழிலைத் தவிர சமூகத்துக்கு உங்கள் பங்களிப்பு வேறு ஏதாவது இருக்கிறதா?

இயற்கை விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தால், சிறிய அளவு நிலம் வாங்கி அதில் குடும்பத்தோடு விவசாயம் செய்து வருகிறோம். அதில் செயற்கை உரங்களோ, பூச்சிக்கொல்லியோ பயன்படுத்துவதில்லை. நாங்கள் விளைவிக்கும் பொருட்களை எங்கள் தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்கிறோம்.

விவசாயத்தில் நாட்டு மாடுகளை பயன்படுத்தினால் மட்டுமே மண் வளம்பெறும். ஆனால், தென்னிந்திய நாட்டு மாடுகள் குறைவான பால் தரும் என்பதால், அவற்றின் பயன்பாடு காலப்போக்கில் குறைந்துகொண்டே வருகிறது. 'நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும்' என்ற எண்ணத்தில், வியாபார நோக்கம் இல்லாமல் சில மாடுகளை பராமரித்து வளர்த்து வருகிறோம்.

சென்னையில் உள்ள சில பள்ளிகளில், மாணவிகளுக்கு எங்கள் தயாரிப்புகளை நேரடி உற்பத்தி விலைக்கே கொடுத்து வருகிறோம்.

உங்களைப் போல தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும், அதில் ஆர்வமுடன் செயலாற்றுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் முதலில் உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்க வேண்டும். லாப நோக்கில் மட்டுமே தொழில் தொடங்கக்கூடாது. ஆரம்பித்த தொழிலில் முழு முயற்சியையும், உழைப்பையும் முதலீடாக்குங்கள். உங்கள் பொருட்கள் தரமானதாகவும், பேக்கிங் ஈர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். உங்கள் தொழிலைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டால்தான், அதில் நிலைத்து நிற்க முடியும்.

உங்கள் எதிர்கால இலக்கு என்ன?

இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வத்தை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். கலப்படமில்லாத உணவுப் பொருட்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.


Next Story