வெள்ளை நிற ஆடைகள் பளிச்சிட எளிய டிப்ஸ்


வெள்ளை நிற ஆடைகள் பளிச்சிட எளிய டிப்ஸ்
x
தினத்தந்தி 8 Oct 2023 1:30 AM GMT (Updated: 8 Oct 2023 1:30 AM GMT)

வெள்ளை நிற ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்க சிறிது நேரம் அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகளும், அழுக்குகளும், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனவை. சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை எளிதாக நீக்கும்.

'பளிச்' என்று வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது பலருக்கும் பிடிக்கும். வெள்ளை நிற உடைகள் ஒருவரின் தோற்றத்தை கம்பீரமாகக் காட்டும். ஆனால் இவற்றை பராமரிப்பதும், இவற்றில் ஏற்படும் கறைகளை நீக்குவதும், சற்றே கடினமான விஷயமாகும். வெள்ளை நிற ஆடைகளைத் துவைக்கும்போது பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ் இங்கே…

வெள்ளை நிற ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்க சிறிது நேரம் அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகளும், அழுக்குகளும், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனவை. சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை எளிதாக நீக்கும்.

ஒரு பக்கெட் தண்ணீரில் 2 மூடி வினிகரை ஊற்றி கலக்கவும். இதில் வெள்ளை நிற ஆடைகளைப் போட்டு மூழ்கச்செய்து, 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் அவற்றை துவைக்கவும். இதன் மூலம் ஆடைகளில் உள்ள மஞ்சள் தன்மை நீங்கி வெண்மை பளிச்சிடும்.

வெள்ளை நிற ஆடைகளில் காபி, டீ, ஊறுகாய் கறைகள் ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதை கறைகள் இருக்கும் இடத்தின் மீது அழுத்தி தேய்க்கவும். பின்பு சோப்பு போட்டு துவைத்தால் எளிதில் கறைகள் நீங்கும்.

வெள்ளை நிற ஆடைகள் புதிதாக தெரிய வேண்டும் என்பதற்காக, பலரும் துவைக்கும்போது அதிக அளவு சோப்பை பயன்படுத்துவார்கள். இதனால் துணியின் இழைகள் விரைவாக சேதம் அடையும். எனவே எப்போதும் துணிகளுக்கு குறைந்த அளவு சோப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வெள்ளை நிற ஆடைகளுக்கு 'குளோரின் பிளீச்' மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும், பருத்தியினால் ஆன துணிகளுக்கு மட்டுமே 'பிளீச்' உபயோகிக்கலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் துணிகளின் இழைகள் சேதம் அடையும். எனவே, மாதம் ஒருமுறை மட்டுமே 'பிளீச்' பயன்படுத்த வேண்டும்.

பேக்கிங் பவுடர், துணிகள் மீது படியும் விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்கும். 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். அதை கறைகள் உள்ள இடத்தில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை உடைகள் பளிச்சிடும்.

வெள்ளை நிற துணிகளை எப்போதும் வெயிலில் உலர்த்த வேண்டும். இது துணியை பளிச்சிட வைக்கும் யுக்தியாகும்.


Next Story