ஆயுத பூஜைக்கு வீட்டை தயார்படுத்த ஆலோசனைகள்


ஆயுத பூஜைக்கு வீட்டை தயார்படுத்த ஆலோசனைகள்
x
தினத்தந்தி 22 Oct 2023 1:30 AM GMT (Updated: 22 Oct 2023 1:30 AM GMT)

சமையல் அறையில் பூச்சிகள் வருவதைத் தடுக்க பச்சைக் கற்பூரம் போட்டு வைக்கலாம். கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை தடுக்க பாத்திரம் கழுவும் சிங்கின் அடியில் கரப்பான் சாக்பீஸ் மூலம் கோடுகள் போட்டு வையுங்கள்.

யுத பூஜை பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் வேலைப்பளுவை சற்றே எளிதாக்க சில வழிமுறைகள்:-

பாத்திரம் கழுவ பயன்படுத்தும் திரவம் 2 டீஸ்பூன், சமையல் சோடா 2 டீஸ்பூன், தண்ணீர் ஒரு கப், இவை மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கரைசலை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பொருட்களை துடைப்பதற்கு பயன்படுத்தலாம்.

ஒட்டடை அடிக்கும் முன்பு படுக்கை, சோபா, டி.வி. போன்றவற்றை பழைய துணிகளைக் கொண்டு மூடி வையுங்கள். பாத்திரங்களின் மேல் பேப்பர் விரித்து வையுங்கள்.

துணிகளை அடுக்கி வைக்கும் அலமாரிகளை துடைத்த பின்பு, பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, சந்தனப் பொடி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தூவுங்கள். அதன் மேல் கனமான காகிதத்தாள்களை விரித்து துணிகளை அடுக்குங்கள்.

சமையல் அறையில் பூச்சிகள் வருவதைத் தடுக்க பச்சைக் கற்பூரம் போட்டு வைக்கலாம். கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை தடுக்க பாத்திரம் கழுவும் சிங்கின் அடியில் கரப்பான் சாக்பீஸ் மூலம் கோடுகள் போட்டு வையுங்கள்.

முடிந்தவரை பேப்பர்களை அலமாரிகளின் மேல் அடுக்கி வைப்பதை தவிருங்கள். இவை கரப்பான் பூச்சிகளையும், கரையான்களையும் அதிகமாக ஈர்க்கும்.

உபயோகிக்காத பாத்திரங்களை அட்டைப்பெட்டியில் போட்டு பேக் செய்யுங்கள். அதன் மேல், என்னென்ன பொருட்களை உள்ளே வைத்து இருக்கிறீர்கள் என்ற குறிப்பை எழுதி ஒட்டுங்கள். பின்பு அட்டைப் பெட்டிகளை பரணில் அழகாக அடுக்கி வையுங்கள்.

பயன்படுத்தாத மற்றும் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் துணிகளை அப்புறப்படுத்துங்கள்.

உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் விபூதி, குங்குமம் போன்றவற்றை செடிகளுக்கு உரமாக இடுங்கள்.

கால்மிதி, திரைச்சீலை போன்றவற்றை துவைக்கும்போது சமையல் சோடாவை பயன்படுத்தினால் அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

நிறம் மங்கியிருக்கும் தலையணை உறையை, தலையணையின் உள் உறையாக பயன்படுத்தலாம். இதனால் தலையணை சீக்கிரம் கறைபடியாது.

உடைந்து இருந்தாலும் பயன்பாட்டில் இருக்கும் குப்பைக்கூடை, துணி உலர்த்தும் கிளிப்புகள் போட்டு வைத்திருக்கும் பழைய டப்பா, பழைய பிளாஸ்டிக் டப்பாக்கள் என அதரப்பழசான பொருட்களை அப்புறப்படுத்துங்கள்.

இருசக்கர வாகனத்தை சுத்தப்படுத்தும் முறைகள்

இப்போது பெரும்பாலானவர்களின் வீட்டில் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இல்லத்தரசிகள் பல்வேறு தேவைகளுக்காக வெளியில் செல்வதற்கு இவை பெரிதும் உதவுகின்றன. ஆயுத பூஜை பண்டிகைக்கு வீட்டை சுத்தப்படுத்திய பின், வாகனங்களை தூய்மைப்படுத்துவது தான் மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதை எளிதாக்கும் வழிகள் இதோ…

இருசக்கர வாகனத்தை கழுவுவதற்கு ஏற்ற, சரியான இடத்தை முதலில் தேர்ந்தெடுங்கள். சிமெண்ட் பூசப்பட்ட சமதளமான பரப்பு இதற்கு ஏற்றதாகும். மண் தரையை தவிர்ப்பதே நல்லது.

வாகனத்தை துடைப்பதற்கு மைக்ரோபைபர் அல்லது மென்மையான துணிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். ஈரப்படுத்தி துடைப்பதற்கு, உலரவைத்து துடைப்பதற்கு என்று குறைந்தபட்சம் 4 துணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். வாகனத்தின் எஞ்சின் மற்றும் சக்கரங்களை துடைப்பதற்கு 2 துணிகளும், இதர பாகங்களை துடைப்பதற்கு 2 துணிகளும் தேவைப்படும்.

வாகனத்தில் எலக்ட்ரிக் பாகங்களின் மீது நேரடியாக தண்ணீர் படுவதை தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் ஈரத்துணியால் துடைப்பதே சிறந்தது.

வாகனங்களை கழுவுவதற்காக விற்கப்படும் பிரத்யேக திரவங்களை பயன்படுத்துவது நல்லது.


Next Story