ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்கும் சிமோன்


ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்கும் சிமோன்
x
தினத்தந்தி 9 Oct 2022 1:30 AM GMT (Updated: 9 Oct 2022 1:31 AM GMT)

25 வயதிலேயே ஜிம்னாஸ்டிக்கில் பல சாதனைகள் படைத்து இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு முன் உதாரணமாகி இருக்கிறார் சிமோன்.

"ஒரு நாளில் ஏதாவது எதிர்மறையான விஷயம் நடந்தால், அதோடு வாழ்க்கை முடிந்து விடாது. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்கிறார் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் உலக அளவில் புகழ் பெற்று விளங்கும் சிமோன் அரியன்னே பைல்ஸ்.

அமெரிக்காவில் 1997-ம் ஆண்டு பிறந்த சிமோனுக்கு குழந்தைப் பருவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது. தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல, தாய் போதைக்கு அடிமை ஆனார். இதனால் சிமோன் தனது இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருடன் வளர்ப்பு பெற்றோர் வீட்டில் தங்கி வந்தார். அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன.

பிறகு சிமோனின் தாத்தா அவரை தத்தெடுத்துக் கொண்டார். தாத்தாவும்-பாட்டியும், அவருக்கு தாயும்-தந்தையும் ஆனார்கள். ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரான அவரது பாட்டி, சிமோனின் 6 வயதில் அவருக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அங்கு வந்து பயிற்சி பெறும் ஜிம்னாஸ்டிக் வீரர்களை பார்த்து சிமோனுக்கு ஜிம்னாஸ்டிக்கில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

ஜிம்னாஸ்டிக்கில் முழுமனதாக கவனம் செலுத்திய சிமோனால், படிப்பில் அவ்வாறு கவனம் செலுத்தி நன்றாக படிக்க முடியவில்லை. துறுதுறுவென்று சுழன்று கொண்டு இருந்த அவருக்கு கவனக்குறைவு மற்றும் ஹைபராக்டிவிட்டி குறைபாடு இருந்தது.

அந்த சமயத்தில், கருப்பின ஜிம்னாஸ்டிக் வீரர்கள் அதிகமாக இல்லாதது, சிமோனுக்கு வருத்தம் அளித்தது. இருந்தாலும் தனது குறைபாட்டை தன்னுடைய சூப்பர் பவராக மாற்றி ஜிம்னாஸ்டிக்கில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்தார்.

ஜிம்னாஸ்டிக் எளிதான விளையாட்டு அல்ல. பயிற்சியின்போது பல காயங்கள் ஏற்படும். ஆனால், சிமோன் கடுமையாக பயிற்சி செய்தார். ஜிம்னாஸ்டிக் கயிற்றின் மீது பத்தடி தூரம் ஏறுவதே மற்றவர்களுக்கு சிரமமாக இருந்தபோது, சிமோன் 15 முதல் 20 அடி வரை ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

2010-ம் ஆண்டு நடந்த தேசிய பெண்கள் ஜூனியர் ஒலிம்பிக் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றதே அவருக்கு ஞாபகம் இருந்தது. அதற்குப் பின்னர் அவர் எத்தனை பதக்கங்கள் வென்றார் என்ற கணக்கு, அவருக்கே தெரியவில்லை.

2013-ம் ஆண்டு நடந்த உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆல்ரவுண்டர் பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார். 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் வரிசையாக அதே பட்டத்தை வென்று ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தனது பெயரை நிலை நிறுத்திக் கொண்டார் சிமோன். கலை ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவரது பதக்க வேட்டை தொடர்ந்தது.

2016-ம் ஆண்டு சிமோன் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியில், ஜிம்னாஸ்டிக்கின் அனைத்து வகை போட்டிகளிலும் வென்று மொத்தம் நான்கு தங்க பதக்கத்தை வென்ற 'முதல் அமெரிக்க பெண் ஜிம்னாஸ்டிக்' என்ற பெருமையையும் தனதாக்கினார்.

25 வயதிலேயே ஜிம்னாஸ்டிக்கில் பல சாதனைகள் படைத்து இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு முன் உதாரணமாகி இருக்கிறார் சிமோன்.


Next Story