

தமிழ் மாதங்களில் மாசி மாதத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. அனைத்து தெய்வங்களை வழிபடுவதற்கும் உகந்ததாக மாசி மாதம் இருந்தாலும், சிவன் வழிபாட்டிற்கு அதிக மகத்துவம் உண்டு. இந்த மாதத்தில் தான் சிவன், தனது 63 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் அடி முடியை காணமுடியாதபடி, மண்ணுக்கும் விண்ணுக்குமாக மாபெரும் ஜோதியாக சிவன் காட்சி தந்ததும் இந்த மாதத்தில் தான்.
மாசி மாதத்தில் முதன்மையாக கொண்டாடப்படுவது, மகா சிவராத்திரி. அதைத் தொடர்ந்து மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது 'மாசி மகம்'. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே 'மாசி மகம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து போன்ற அனைத்து புண்ணிய நதிகளும், தங்களுடைய பாவச் சுமைகளை போக்கி, புனிதத் தன்மையை மீட்டெடுக்க கும்பகோணம் மகாமகம் குளத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம்.
எனவே, அன்றைய தினம் கும்பகோணத்தில் உள்ள மகா மகம் குளத்தில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும், முன்பிறவியில் செய்த பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இத்தகைய மகத்தான பலனை தருவதால்தான் மாசி மகம் தினத்தை 'கடலாடும் நாள்', 'தீர்த்தமாடும் நாள்' என்கிறார்கள்.
ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் வருண பகவான், உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் தூக்கி வீசப்பட்டார். இதனால் உலகில் மழை இல்லாமல் அனைத்து உயிர்களும் வாடின. வருண பகவானும், சிவபெருமானை நினைத்து வேண்டினார். இந்நிலை குறித்து தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார்.
இவ்வாறு வருண பகவான் விடுதலை பெற்ற நாளே 'மாசி மகம்' என்று கருதப்படுகிறது. விடுதலை பெற்ற வருண பகவான், “இறைவா, பிரம்மஹத்தி தோஷத்தால் உடல் கட்டுண்டு கடலில் கிடந்தபோது, உங்களை நினைத்து வேண்டியதன் பலனாக எனக்கு விடுதலை கிடைத்தது. இதேபோல் மாசி மகத்தன்று, புண்ணிய நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களை போக்கி அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறே அருள்புரிந்தார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
'பார்வதி தேவியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்' என்று தட்சன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தான். அதன்படி, மகளாக பிறந்த பார்வதிக்கு 'தாட்சாயிணி' என்று பெயர் சூட்டி வளர்த்தான். அன்னை பார்வதி தேவி, தட்சனின் மகளாக அவதரித்தது மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. எனவே அன்றைய தினம் அம்பாள் வழிபாடும் சிறப்பு வாய்ந்ததாகும்.
முருகப்பெருமான், சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததும், மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து உலகை மீட்டு வந்ததும் மாசி மகத்தில் தான் என்று சொல்லப்படுகிறது. எனவே மாசி மகத்தன்று, சிவபெருமான் வழிபாடோடு அம்பாள், முருகப் பெருமான், மகாவிஷ்ணு வழிபாடும் மேற்கொள்ளலாம்.
இந்த ஆண்டு மாசி மகம், மாசி மாதம் 18-ந் தேதி (2-3-2026) திங்கட்கிழமை வருகிறது. மாசி மகத்தன்று விரதம் இருக்க நினைப்பவர்கள், அதிகாலையில் எழுந்து புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு சிவன் தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும். மதிய வேளை மட்டும் உணவருந்தி, இரவில் பால், பழம் சாப்பிடலாம்.
அன்றைய தினம் மற்ற சிந்தனைகளை தவிர்த்து, இறை சிந்தனையோடு மட்டும் இருக்க வேண்டும். சிவபெருமானுக்குரிய தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யவேண்டும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், சகல தோஷங்களும் விலகும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.