சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: 19-ந் தேதி நடக்கிறது


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: 19-ந் தேதி நடக்கிறது
x

ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி

பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும் இந்த ஆஞ்சநேயர் சாமியை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகை தருகின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 19-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி 18-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலயசாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சகால தீபாராதனை, இரவு 7 மணிக்கு காலபைரவருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவில் 19-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள்பொடி, அரிசி மாவு, பன்னீர் என 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக கோவில் கலையரங்க மைதானத்தில் ஊர் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. புஷ்பாபிஷேகத்தில் கிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து துளசி, கொழுந்து, மரிக்கொழுந்து, பச்சை, ரோஜா, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

விழாவையொட்டி லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், அபிஷேக பொருட்கள், புஷ்பாபிஷேக மலர்கள், வஸ்திரங்கள், பிரசாத பைகள் ஆகியவற்றிற்கான உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நன்கொடை செலுத்துவோர் கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

1 More update

Next Story