

சென்னை,
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவராத்திரியையொட்டி நாள்முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் தமிழகத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகராக கருதப்படும் இங்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அங்கு இந்த ஆண்டுக்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம்நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்கப்பல்லக்கில் முத்தங்கி சேவை அலங்கா ரத்தில் காட்சி தந்தனர்.
8-ம் நாளான மகா சிவராத்திரியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் எழுந்தருளலும், இரவு 9 மணிக்கு வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட கோவில் நடையானது பகல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சாத் தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்து இருக்கும். ராமநாதசு வாமிக்கு சிவராத்திரி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.
திருவிழாவில் 9-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் மேலத்தெரு மண்டகப் படிக்கு எழுந்தருளல் நடக்கிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
* சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.
* சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
* சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.
* சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
* எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
* சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
* சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
* சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
* கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
* திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.
* பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் 'சங்கர நாராயண' வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் 'பாண லிங்கம்' இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.
* மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
* ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.
* சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.
* திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.
* கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
* சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
* ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.
* சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.