

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் குறித்து அறிந்துகொள்வோம்.
பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் பிரம்ம கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமான், பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார்.
இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின்போது சிவபெருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகா விஷ்ணு கூறியதுடன் சாப விமோசனத்திற்கான வழியையும் கூறுகிறார்.
இதன்படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.
சிவபெருமான் வந்து இருப்பதை அறிந்து கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மயான கொள்ளையில் சிவனுக்கு படைக்க, நவதானியங்களைக் கொண்டு சுண்டல், கொழுக்கட்டை என தயாரித்து அந்த சுவையான உணவை மூன்று உருண்டைகளாக பிடித்து கொண்டு வருகிறார்.
மகா விஷ்ணுவின் யோசனைப்படி முதல் இரண்டு உருண்டை உணவையும் சிவபெருமானின் திருவோட்டில் இட அதை பிரம்ம கபாலம் உண்கிறது. ஆனால் மூன்றாவது உருண்டைய திருவோட்டில் போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்துவிடுகிறார். உணவின் சுவையில் மயங்கிக் கிடந்த பிரம்ம கபாலம், தன் நிலையை மறந்து சிவபெருமானின் கையைவிட்டு கீழே இறங்கி உணவை தேடித் தேடி சாப்பிடத் தொடங்கியது.
இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பார்வதி தேவி ஆங்கார உருவம் கொண்டு பிரம்ம கபாலத்தை தன் காலால் மிதித்து ஆட்கொள்கிறார். இதனால் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
பிரம்ம கபாலத்தை ஆட்கொள்வதற்காக கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறியிருந்த பார்வதி தேவி, இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது.
பிரம்ம கபாலத்தை ஆட்கொண்ட பிறகும் கோபம் தணியாத பார்வதி தேவியை சாந்தப்படுத்த, தேவர்கள் ஒன்றுகூடி தேர்த் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருந்தனர். இந்த தேரில் பார்வதி தேவி அமர, மற்ற தேவர்கள் தேர் இழுத்தனர். தேவி குடிகொண்டுள்ள பூங்காவனத்தை வலம் வந்து தேரை நிறுத்தினர். அப்போது தேவியின் சினம் முற்றிலும் தணிந்துவிடுகிறது. இந்த விழாவே, இன்றுவரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது. பார்வதி தேவி, உணவை மயானத்தில் இறைத்த நிகழ்வானது ‘மயானக் கொள்ளை’ என்ற பெயரில் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.
பிரம்ம கபாலத்தை ஆட்கொள்வதற்காக ஆங்கார உருவம் எடுத்ததால் பார்வதி தேவி, அங்காள பரமேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார்.