

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் விழாக்களின் விவரம் வருமாறு:-
15 - ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் கோபால விநாயகர் பூஜை, இரவு கொடியேற்றம் மற்றும் சக்தி கரக ஊர்வலம் நடைபெறும். 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் மயானக் கொள்ளை இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. 17-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
18-ந் தேதி (புதன்கிழமை) காலை தங்க நிற மரப் பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. 19-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை தீமிதி விழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
22 - ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை அம்மன் வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. 23-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும், இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கிலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் தீர்த்தவாரியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 25-ந் தேதி (புதன்கிழமை)யிலிருந்து 27-ந் தேதி வரை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
27-ந்தேதி மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, இரவு கும்பப் படையலுடன் விழா முடிவடைகிறது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி, கரகாட்டம், மாடு, மயிலாட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர் மற்றும் பருவதராஜகுல வம்சத்தைச் சேர்ந்த ஏழு வம்சாவழி பூசாரிகள் செய்து வருகின்றனர்.